சமயபுரம் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.36 கோடி வசூல்: 3 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளியும் கிடைக்கப்பெற்றது!

 
samayapuram

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.36 கோடி ரொக்கப்பணம், 3 கிலோ தங்கம் மற்றும் 4.7 கிலோ வெள்ளி கிடைக்கப்பெற்றுள்ளது.

திருச்சி மாவட்டம் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவில், தமிழ்நாட்டில் உள்ள பிரத்தி பெற்ற அம்மன் ஸ்தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இக்கோவிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, அம்மனை தரிசித்து தங்களது நேர்த்திக்கடன் நிறைவேற்றி செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள் மாதம் இருமுறை உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்படுகிறது.

hundial

அதன்படி,நேற்று கோவில் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி இணை ஆணையர் கல்யாணி முன்னிலையில் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் பக்தர்கள், தன்னார்வலர்கள், கோவில் பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு காணிக்கைகளை எண்ணினர். 18 உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணியதில் காணிக்கையாக ரூ.1 கோடியே 36 லட்சத்து 94 ஆயிரத்து 459 ரொக்கப்பணம் கிடைக்கப்பெற்றது.

மேலும், 3 கிலோ 181 கிராம் தங்கம், 4 கிலோ 730 கிராம் வெள்ளி மற்றும் 206 வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் கிடைக்கப்பெற்றதாக கோவில் இணை ஆணையர் கல்யாணி தகவல் தெரிவித்துள்ளார்.  மேலும், தைப்பூச திருவிழாவை ஒட்டி 11 நாட்கள் அம்மன் வீதி உலா வந்தபோது வைக்கப்பட்ட தற்காலிக உண்டியலில் ரூ.86 ஆயிரத்து 432 வசூலாகி உள்ளது.