மதுரையில் அதிகளவு பயணிகளை ஏற்றும் ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல் - ஆட்சியர் உத்தரவு!

 
auto

மதுரை மாநகரில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு பயணிகளை ஏற்றிச் செல்லும் ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், பெர்மிட் ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் எச்சரித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பாக தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடன் காலாண்டு கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சிர் அனீஷ்சேகர் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

மதுரை மாநகரில் தற்போது  பெர்மிட் பெற்று இயக்கும் ஷேர் ஆட்டோக்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான நபர்களை ஏற்றிச் செல்வது, பயணிகள் அமரும் உள்கட்டமைப்புகளை விதிகளுக்கு மாறாக மாற்றி வாகனங்களை இயக்கும் பட்சத்தில் அவ்வகை ஆட்டோக்களை பறிமுதல் செய்வதுடன், பெர்மிட் ரத்து செய்ய சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

bus footboard

அரசு பேருந்துகளில் படிக்கட்டில் பயணம் செய்யும் பள்ளி / கல்லூரி மாணவர்களை சிறப்பு குழு அமைத்து அவர்களை கண்காணித்து, அம்மாதிரி விதி மீறும் மாணவர்களை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று தக்க அறிவுரைகள் வழங்கி அவ்வாறான  செயலில் எதிர்காலங்களில் ஈடுபடா வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழகம் மற்றும் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது.

மதுரை மாநகராட்சி, தமிழ்நாடு மின்சார வாரியம், அரசு போக்குவரத்துக்கு கழகம், உணவு பாதுகாப்புத்துறை மற்றும் சுகாதாரத் துறைக்கு தொடர்பான நுகர்வோர் அமைப்பினர் தெரிவித்த புகார்களின் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் பிறதுறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்