பெரம்பலூர் அருகே குட்டையில் மூழ்கி அக்கா, தங்கை பலி!

 
drowning drowning

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே குட்டையில் மூழ்கி அக்கா, தங்கை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே உள்ள திருவளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். தொழிலாளி. இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், மகாலெட்சுமி(5), ஶ்ரீதேவி (3) என்ற 2 மகள்களும் உள்ளனர். சுகன்யா, தற்போது கர்ப்பமாக உள்ளார். நேற்று முன்தினம் மருத்துவ பரிசோதனை செய்வதற்காக தம்பதியினர் இருவரும் மருத்துவமனைக்கு சென்றிருந்தனர். இதனால் வீட்டில் சிறுமிகள் இருவரும் தனியே இருந்துள்ளனர். மாலையில் சுரேஷும், சுகன்யாவும் வீட்டிற்கு வந்தபோது சிறுமிகள் இருவரும் காணவில்லை. 

perambalur

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இருவரையும் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால், கிடைக்கவில்லை. இதனால், சுரேஷ் சிறுமிகளை கண்டுபிடித்து தரக்கோரி பாடாலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து சிறுமிகளை தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று காலை கிராமத்தின் அருகே ராஜாமலை பகுதியில் உள்ள குட்டையில் சிறுமிகள் இருவரும் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தனர். 

தகவல் அறிந்த பாடாலூர் போலீசார், தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் மகாலெட்சுமி, ஶ்ரீதேவி ஆகியோரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தந்தை சுரேஷ் அளித்த புகாரின் பேரில் பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குட்டையில் மூழ்கி அக்கா, தங்கை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.