மதுபோதையில் தந்தையை கழுத்தில் மிதித்துக் கொன்ற மகன் கைது!

 
Murder

கோவையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தந்தையை கழுத்தில் மிதித்து கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவை பீளமேடு நாராயணசாமி வீதியை சேர்ந்தவர் ராஜு என்கிற துரைராஜ்(73). இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களது மகன் ரவிராஜ். ராஜேஸ்வரி, அதே பகுதியில் உள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்தார். மகன் ரவிராஜ், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், ரவிராஜ் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. இதனால் குடித்துவிட்டு, அடிக்கடி பெற்றோருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். 

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை காலை ராஜேஸ்வரி வீட்டு வேலைக்கு சென்றுவிட்டு மதியம் 3 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, கட்டிலில் கணவர் துரைராஜ் ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். மேலும், அவரது தலை, மார்பில் கால்களால் மிதித்த தடயம் இருந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி கதறி அழுதுகொண்டே அருகில் இருந்தவர்களிடம் சென்று விசாரித்துள்ளார். அப்போது, மகன் ரவிராஜ் வீட்டிற்கு வந்து சென்றதாக தெரிவித்துள்ளனர்.

arrest

 
இதனை அடுத்து, ராஜேஸ்வரி பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார், துரைராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ராஜேஸ்வரி வேலைக்கு சென்றவுடன் ராவிராஜ் வீட்டிற்கு வந்துள்ளார். 

அப்போது, தந்தையுடன் தகராறு ஏற்பட்ட நிலையில், மதுபோதையில் இருந்த ரவிராஜ் அவரை கீழே தள்ளி மார்பில் மிதித்துள்ளார். அத்துடன், தலையை தரையில் அடித்தும் கொலை செய்தது தெரியவந்தது. இதனை  அடுத்து, தப்பியோடிய ரவிராஜை போலீசார் கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.