கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக ஸ்ரீதர் ஐஏஎஸ் பொறுப்பேற்பு!

 
kumari collector

கன்னியாகுமரி மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக மாற்ற முழு முயற்சி மேற்கொள்வேன் என புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள ஸ்ரீதர் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வந்த அரவிந்த் ஐஏஎஸ், சமீபத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புதிய ஆட்சியராக ஸ்ரீதர் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், இன்று குமரி மாவடட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த ஸ்ரீதரிடம், முன்னாள் ஆட்சியர் அரவிந்த் பொறுப்புகளை ஒப்படைத்தார். புதிய ஆட்சியராக பொறுப்பேற்ற அவருக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் சிவபிரியா, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கௌசிக், நாகர்கோவில் ஆர்டிஓ சேதுராமலிங்கம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

kumari

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் ஸ்ரீதர், குமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் அனைத்து நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டங்கள் அனைத்தும் இன்னும் சிறப்பாக செயல்படுத்த தனி கவனம் செலுத்தப்படும். அதே நேரத்தில் பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும். பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்கு அனைத்துத்துறை அலுவலர்களுடன் இணைந்து உடனடி தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், வளர்ச்சி பணிகள், மக்கள் சேவைகள், குறைதீர்க்கும் பணிகள் உள்ளிட்ட அனைத்திற்கும் தனி கவனம் செலுத்தி அவற்றிற்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குமரி மாவட்டத்தை பொறுத்தவரையில் நகர்புற பகுதிகள் அதிகம். எனவே நகர்புற நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல், வனம், சுற்றுலா, மீன்வளத்துறை உள்ளிட்ட திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரது ஒத்துழைப்புடன் குமரி மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக மாற்றுவதற்கு முழு முயற்சி மேற்கொள்வேன், இவ்வாறு அவர் கூறினார்.