ஸ்ரீரங்கம் யானைகளுக்கு நடைபயிற்சியுடன் கூடிய குளியல் தொட்டி திறப்பு... உற்சாகமாக குளித்து மகிழ்ந்த ஆண்டாள், லட்சுமி!

 
srirangam

திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் யானைகள் குளிப்பதற்காக நடை பயிற்சியுடன் கூடிய குளியல் தொட்டி இன்று திறக்கப்பட்ட நிலையில், குளத்தில் ஆண்டாள் மற்றும் லட்சுமி யானை உற்சாகமாக குளித்து மகிழ்ந்தன.

108 வைணவ தலங்கங்ளில் முதன்மையான தலமாக விளங்கும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டாள், பிரேமி என்கிற லட்சுமி ஆகிய 2 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானைகள் தினசரி விஸ்வரூப பூஜைகள் செய்வதோடு, திருவிழா நாட்களில் பங்கேற்று கைங்கரிய பணிகள் செய்து வருகின்றன. யானைகளுக்கு மாதம் இரு முறை கால்நடை மருத்துவர்கள் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கோவிலின் வடகரையில் உள்ள உடையவர் தோப்பில் ஏற்கனவே யானைகள் நீராடுவதற்காக 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குளியல் தொட்டி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

trichy

இதில் தற்போது 857 மீட்டரில் யானைகள் நடந்து செல்வதற்கு பிரத்யேகமாக நடைபாதை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 3 நாட்களுக்கு ஒரு முறை குளியல் தொட்டியில் நீராட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் தினசரி கோவிலில் இருந்து 1.100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தோப்புக்கு நடைபயற்சியாக சென்று, அங்குள்ள வட்டப்பாதையில் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபயிற்சி மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் கோவிலில் உள்ள யானை கூடத்திற்கு வந்தடையும். இதன் முலம் 2 யானைகளும் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 

srirangam elephant

புதிதாக ஏற்படுத்தப்பட்ட நடைபாதை திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரித்து மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்று நடைபாதையை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.புதிதாக உருவாக்கப்பட்ட நடைபாதையின் வாயிலாக கடந்த சென்ற யானைகள் நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தன.