மின்மீட்டர் பொருத்த ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய மேற்பார்வையாளர் கைது!

 
bribe

திருவண்ணாமலை அருகே புதிதாக கட்டும் வீட்டிற்கு மின்மீட்டர் பொருத்த ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக, மின்வாரிய மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டார். 

திருவண்ணாமலை வேங்கிகால் பகுதியை சேர்ந்தவர் வரதன். ஓட்டலில் தொழிலாளி. இவர் மேலத்திகான் கிராமத்தில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டிற்கு தற்காலிக மின் இணைப்பு கோரி இணையதளம் மூலம் விண்ணப்பித்திருந்தார். இதற்காக ரூ.5 ஆயிரம் கட்டணமாக செலுத்தினார். இதனை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன் அவரது வீட்டில் மின்சார மீட்டர் பொருத்திய மின்வாரிய மேற்பார்வையாளர் ரேணு என்பவர், மின் மீட்டர் பொருத்தியதற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் தர கேட்டுள்ளார். இதற்கு வரதன் மறுப்பு தெரிவித்ததால் தொடர்ந்து அவரிடம் செல்போனில் பணத்தை கேட்டு வந்துள்ளார்.

arrest

லஞ்சம் தர விரும்பாத வரதன், இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆலோசனையின்படி ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரம் பணத்தை அவர், மின்வாரிய மேற்பார்வையாளர் ரேணுவிடம் வழங்கினார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான போலீசார், ரேணுவை கையும் களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் பணத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.