கள்ளக்காதல் விவகாரத்தில் விவசாயி கொலை... ஊராட்சி மன்ற தலைவரின் மகன் உள்பட இருவர் கைது!

 
rmd murder

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் விவசாயி அடித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கிளியூரைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (46). விவசாயி. இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், கடந்த புதன்கிழமை திருநாவுக்கரசு தனது வயலுக்கு உரம் போட சென்ற நிலையில், உடலில் காயங்களுடன் சடலமாக கிடந்தார். தகவல் அறிந்து அங்கு சென்ற நயினார்கோவில் போலீசார், திருநாவுக்கரசுவின் உடலை  மீட்டு  பிரேத பரிசோதனைக்காக திருவாடாணை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

rmd

இதனிடையே, திருநாவுக்கரசுவின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து, மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த கொலை சம்பவம் குறித்து நயினார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, திருநாவுக்கரசு கள்ளக்காதல் விவகாரத்தில் தலையில் கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக கிளியூரை சேர்ந்த  ஊராட்சி மன்ற தலைவரின் மகன் ஜீவானந்தம்(19) மற்றும் முத்துப்பாண்டி ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  

அப்போது, கொலை செய்யப்பட்ட திருநாவுக்கரசு, முத்துப்பாண்டி மற்றும் ஜீவானந்தம் ஆகியோரது உறவுக்கார பெண்களிடம் தவறான உறவு வைத்திருந்ததும், அதனை கைவிடும்படி கண்டித்தும் அவர் உறவை தொடர்ந்ததால் அடித்துக்கொன்றதும் தெரியவந்தது. இதனை அடுத்து, இவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.