மேட்டுப்பாளையம் அருகே வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற இருவர் கைது... நாட்டு துப்பாக்கி பறிமுதல்!

 
gun

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சட்டவிரோதமாக வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி மற்றும் நாட்டு வெடிண்டுகளை பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள சென்னாமலை கரட்டுமேடு பகுதியில் சிலர் சட்டவிரோதமாக நாட்டுத் துப்பாக்கிகளை வைத்து வன விலங்குகளை வேட்டையாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாலமுருகன் தலைமையில், காவல் ஆய்வாளர் சண்முகம், உதவி ஆய்வாளர்கள் செல்வநாயகம், தாமோதரன் ஆகியோர் கரட்டுமேடு பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரது வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர். 

gun

இந்த சோதனையின்போது, அவரது வீட்டில் ஒற்றைக்குழல் நாட்டுத்துப்பாக்கி மற்றும் வெடிமருந்து பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, செல்வம் அளித்த தகவலின் பேரில் அதே பகுதியை சேர்ந்த மனோகரன் (40) என்பவரது வீட்டில் போலீசார் சோதனையிட்டனர். அப்போது, அவரது வீட்டின் வெளியே 4 அவுட்டு காய்கள் எனப்படும் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, அவற்றை பறிமுதல் செய்த மேட்டுப்பாளையம் போலீசார், இதுகுறித்து செல்வம், மனோகரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.