அவிநாசி அருகே சிறுத்தை தாக்கி இருவர் படுகாயம்... கிராம மக்கள் அச்சம்!

 
leopard

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே சிறுத்தை தாக்கியதில் விவசாயி உள்பட இருவர் படுகாயம் அடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள பாப்பாங்குளம் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன். விவசாயி. இவரது தோட்டத்தில் பயிரிடப்பட்டு உள்ள சோளத்தட்டை அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, நேற்று மாலை வரதராஜன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி மாறன் ஆகியோர் அறுவடை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு திடீரென வந்த சிறுத்தை ஒன்று வரதராஜனையும், மாறனையும் தாக்கியது. இதில் வரதராஜனுக்கு தோள்பட்டையிலும், மாறனுக்கு முகத்திலும் படுகாயம் ஏற்பட்டது. இவர்களது அலறல் சத்தம் கேட்டு வந்த கிராம மக்கள், இதுகுறித்து சேவூர் போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.  

leopard

அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் கோட்ட வனத்துறையினர் மற்றும் போலீசார், காயமடைந்த இருவரையும் மீட்டு அவிநாசி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு , பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், பாப்பாங்குளம் பகுதியில் உலாவும் சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சிறுத்தை தாக்கி இருவர் காயமடைந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுததி உள்ளது. இதனால் சிறுத்தையை விரைந்து பிடிக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


இதனிடையே, பாப்பாங்குளம் பகுதியில் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் இருந்து வனத்துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென முன்னாள் சபாநாயகரும், அதிமுக எம்எல்ஏ-வுமான தனபால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள டிவிட்டர் பதிவில், பாப்பாங்குளம் பகுதியில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை தாக்கியதில் 2 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வன அலுவலரிடம் தொலைபேசியில் ஆலோசித்ததாகவும், அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக, களத்தில் உரிய அதிகாரிகள் இருப்பதாகவும் தனக்கு தனக்கு தகவல் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார். எனவே, பாப்பாங்குளம் பஞ்சாயத்து மற்றும் அருகில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வனஅலுவலர்களுக்கு ஒத்துழைக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.