பட்டாசு வெடிப்பதில் விதிமீறல் - ஈரோட்டில் 32 பேர் மீது வழக்குப்பதிவு

 
crackers

ஈரோடு மாவட்டத்தில் நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 27 பேர் மீதும், அனுமதியில்லாத பட்டாசு வெடித்ததாக 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தடை செய்யப்பட்ட பட்டாசுகள், அதிக ஒலி எழுப்பக் கூடிய பட்டாசுகள் வெடிக்க கூடாது என்றும், காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும் நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. 

police
ஈரோடு மாவட்டத்தில் எஸ்.பி. சசிமோகன் உத்தரவுப்படி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தடை செய்யப்பட்ட பட்டாசு வெடிக்கப்படுகிறதா?, நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிக்கப்படுகிறதா?, என்பதை கண்காணிக்க போலீசார் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில்,  தீபாவளி அன்று நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக மாவட்டம் முழுவதும் 27 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கோபி பஜனை கோவில் வீதி பிரகாஷ் (25), அங்கம் பாளையம் மாரியம்மன் கோவிலில் மணிகண்டன், தமிழரசன், வசந்தகுமார், சித்தாம் பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் என 5  பேர் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடித்ததாகவும், அதிக சதங்கள் எழுப்பிய  பட்டாசுகளை வெடித்ததாகவும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது