போலீஸ் ஜீப் மீது பைக் மோதியதில் வெல்டர் பலி... இறுதிச்சடங்குக்கு வந்த பாட்டி விபத்தில் பலியான சோகம்!

 
dgl

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே போலீஸ் ரோந்து வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் வெல்டர் உயிரிழந்த நிலையில், அவரது இறுதிச்சடங்குக்கு வந்த பாட்டி விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ள முடக்குப்பட்டியை சேர்ந்த ஸ்ரீராமன் மகன் முத்து(22). இவர் திருப்பூரில் உள்ள வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த முத்து, திங்கட்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் அய்யலூருக்கு சென்று கொண்டிருந்தார். திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் கடவூர் பிரிவு அருகே போலீசாரின் ரோந்து ஜீப் திடீரென பழுதாகியதால், ஜீப்பை போலீசார் சாலையில் தள்ளி சென்றுள்ளனர்.

அப்போது, முத்து ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக ஜீப்பின் பின்னால் அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முத்துவை, அருகில் இருந்தவர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு நேற்று உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

dgl gh

உடலை சொந்த ஊருக்கு கொண்டுசென்ற உறவினர்கள் அங்கு முத்துவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி தங்கமாபட்டியில் உள்ள இடுகாட்டில் உடலை வைத்து விட்டு திண்டுக்கல்- திருச்சி  4 வழிச்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் மாவட்ட கூடுதல் எஸ்பி வெள்ளைச்சாமி, வேடசந்தூர் டிஎஸ்பி மகேஷ் மற்றும் வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, முத்துவின் பிரேத பரிசோதனை அறிக்கையை வர வழைத்து உறவினர்களிடம் காண்பித்தனர். இதில் சமாதானம் அடைந்த உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு, முத்துவின் உடலை தகனம் செய்தனர்.

இதனிடையே, உயிரிழந்த முத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவரது பாட்டி பழனியம்மாள் என்பவர் பேருந்தில் ஊருக்கு வந்திருந்தார். மயானம் செல்வதற்காக தங்கமாபட்டி பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலின் பேரில் வடமதுரை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.