• October
    17
    Thursday

Main Area

Mainஜெயலலிதாவை அவமதித்த திமுக பெண்களை பாதுகாக்குமா?-பிரதமர் மோடி கேள்வி!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

கோவை: ஜெயலலிதாவைஅவமதித்த திமுக பெண்களை பாதுகாக்குமா என கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 22 தொகுதிகளுக்குமான சட்டப்பேரவை தேர்தலும் இதனுடன் சேர்த்து நடைபெறவுள்ளது. தமிழகத்தில் அதிமுக தலைமையில், பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும், திமுக தலைமையில், காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன.

இவ்விரு தேர்தல்களையும் எதிர்கொண்டுள்ள தமிழக அரசியல் கட்சிகள், இதற்கான வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

அந்த வகையில், அதிமுக, பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவை கொடிசியா மைதானத்தில் பிரசார கூட்டம் நடைபெற்றது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் இதில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று மாலை கோவை வந்தடைந்தார்.

கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, எதிர் கூட்டணியில் பிரதமர் வேட்பாளரை தேடிக் கொண்டிருக்கின்றனர். 130 கோடி மக்கள் வாழும் தேசத்தில் மோடியை மட்டுமே பிரதமராக ஏற்றுள்ளனர். 2ஜி முறைகேடு மூலம் தமிழகத்தை உலகளவில் தலைகுனிய வைத்தது திமுக என சாடினார்.

தொடர்ந்து அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த பிரதமர் மோடி, மருதமலை முருகனுக்கு அரோகரா, தமிழக சகோதர, சகோதரிகளுக்கு இந்த காவல்காரனின் வணக்கம் என தமிழில் கூறி தனது உரையை தொடங்கினார். அவர் பேசியதாவது:தமிழ் புத்தாண்டு கொண்டாடும் மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். தமிழ் கலாச்சாரம், மொழி தனித்துவம் வாய்ந்தது, சிறப்பானது.

coimbatore

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் எண்ணஙகள் நம்மை வழிநடத்தும் என நினைக்கிறேன். கல்வி, தொழில் வளம் நிறைந்த கோவையில் பேசுவதில் பெருமை அடைகிறேன். 21-ஆம் நூற்றாண்டில் இந்தியா எப்படி இருக்கும் என்பதை காட்டப்போகும் தேர்தல் இது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் இலக்கு நிலையான அரசு, எதிர்க்கட்சிகளின் எண்ணம் நிலையற்ற அரசாங்கத்தை உருவாக்குவது. அதிகாரத்தை கைப்பற்ற எதிர்க்கட்சிகள் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பாதுகாப்பான நாட்டை கட்டமைப்பதில் தமிழகத்தின் பங்கு முக்கியமானது. தேசத்தின் பாதுகாப்புக்கு பாஜக கூட்டணி முன்னுரிமை அளித்து வருகிறது. நாட்டின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் உறுதியாக இருக்கிறோம். தேச பாதுகாப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகளிடம் எந்த திட்டமும் இல்லை.

stalin rahul

மக்களுக்கு திமுக - காங்கிரஸ் கூட்டணி எதுவும் செய்யவில்லை. கோவையில் கடந்த 1998-ஆம் ஆண்டு தீவிரவாத தாக்குதல் நடந்தது. அப்போது, திமுக-காங்கிரஸ் மென்மையான போக்கை கடைப்பிடித்தன.

தேசியவாதியாக இருப்பது குற்றமா? இந்த தேசியவாதம் தான் 18 ஆயிரம் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கியது. இந்த தேசியத்தன்மை தான் ஒவ்வொருவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்க காரணமாக இருந்தது. ராணுவம், விமானப்படை நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் சந்தேகித்து வருகின்றன. துல்லிய தாக்குதல் நடந்ததா? விமானப்படை தாக்குதல் நடந்ததா? என எதிர்க்கட்சியினர் கேட்கின்றனர். நம் நாட்டு மீது தாக்குதல் நடத்தினால் வட்டியும் முதலுமாக திருப்பித் தரப்படும்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தேச விரோத சக்திகளை ஊக்குவிக்கும் நாட்டுக்கு எதிரான அறிக்கை. நடுத்தர வர்க்கம் குறித்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் எதுவும் இல்லை. நடுத்தர வர்க்கம் சுயநலமிக்கது என காங்கிரஸ் கருதுகிறது. ஆனால், நடுத்தர வர்க்கத்தினரின் மேம்பாட்டுக்காக பாஜக கூட்டணி உழைத்து வருகிறது. 10 ஆண்டுகளில் காங்கிரஸ் கூட்டணி 25 லட்சம் வீடுகளை மட்டுமே கட்டியது, ஆனால் 5 ஆண்டுகளில் பாஜக அரசு 1.5 கோடி வீடுகளை கட்டி கொடுத்துள்ளது

காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கேரள கலாசாரத்தை சீரழித்து வருகின்றன. வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரசும், கம்யூனிஸ்ட் கட்சியும் சேர்ந்து சபரிமலையின் புனிதத்தை பாழாக்கி வருகிறது.

jayalalithaa.

காங்கிரசும், திமுகவும் பெண்களுக்கு எதிரான கட்சிகள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஜெயலலிதா பற்றிய திமுக-வின் அவதூறு பேச்சுகளை மறக்க முடியாது. ஜெயலலிதாவைஅவமதித்த திமுக பெண்களை பாதுகாக்குமா? என கேள்வி எழுப்பினார்.

மேலும், நதிகளை இணைக்கவும், தூய்மைப்படுத்தவும் புதிய திட்டங்களை கொண்டு வரவுள்ளோம். மலை நீர் சேமிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நீர் பற்றாக்குறை தீர்க்கப்படும். நீரை முழுமையாக பயன்படுத்த சிறப்பு அமைச்சகம் ஏற்படுத்தப்படும். பாதுகாப்பு தளவாடங்களை உருவாக்கும் தொழிலகங்கள்  தமிழகத்தில் அமைய உள்ளன என வாக்குறுதி அளித்த மோடி, நாடு வளர்ச்சி அடைய, விவசாயம் மேம்பட வாக்களியுங்கள் என வாக்கு சேகரித்தார்.

இதையும் வாசிங்க

தமிழகத்தில் விடுபட்ட 4 தொகுதிகளுக்கு மே 19-ல் இடைத்தேர்தல்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

2018 TopTamilNews. All rights reserved.