கொரோனா பரவல் எதிரொலி… வால்பாறைக்கு வெளியூர் நபர்கள் வர கட்டுப்பாடு!
கோவை
கொரோனா பரவல் அதிகரிப்பை தொடர்ந்து, வால்பாறை பகுதிக்கு வெளி நபர்கள் வருவதற்கு, மாவட்ட சுகாதாரத்துறை தடை விதித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தொற்று எண்ணிகை மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளது. இதனால் மாநில அரசு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டு உள்ளது. இதன் காரணமாக, பாதிப்பில் முதலிடத்தில் நீடித்து வரும் கோவை மாவட்டத்திலும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புகழ்பெற்ற சுற்றுலா தலமான கோவை மாவட்டம் வால்பாறைக்கு, வெளியாட்கள் வருவதற்கு தடை விதித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிரடி உத்தரபு பிறப்பித்து உள்ளது.
மேலும், அட்டகட்டி, ஆழியார், மழுக்குப்பாறை ஆகிய சோதனைச் சாவடிகளில் வாகன தணிக்கை மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதேபோல், வால்பாறை நகரில் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக, நடுமலைச் சாலை, காமராசு நகர், ஸ்டேன் மோர் சாலை, முடீஸ் சாலை ஆகிய இடங்களில் மீண்டும் சோதனைச் சாவடிகள் திறக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது .
இந்த சோதனைச் சாவடிகளில், சுகாதாரத்துறையினர், நகராட்சி, வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து சோதனையில் ஈடுபட உள்ளனர். மேலும், அரசு அறிவித்து உள்ள கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைபிடிக்க 4 துறைகளும் இணைந்து தீவிர நடவடிக்கை என வால்பாறை வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு லட்சுமணன் தெரிவித்து உள்ளார்.