“அம்மா இல்லாம யாருக்கு ஓட்டு போடுறது?” – பரிதவிக்கும் மக்கள்! #rajapalayam
தற்போது திமுக வசம் இருக்கும் ராஜபாளையம் தொகுதி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போட்டியிடுவதால் கவனம் பெற்றிருக்கிறது. ஜோதிடத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்ட ராஜேந்திர பாலாஜி, தனது சொந்த தொகுதியான சிவகாசியை விட்டு ராஜபாளையத்தில் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இவரை எதிர்த்து சிட்டிங் எம்எல்ஏ சௌ.தங்கபாண்டியன் (திமுக), ஜெயராஜ் (நாதக), கே.காளிமுத்து (அமமுக) போட்டியிடுகிறார்கள்.
ராஜபாளையத்தைப் பொறுத்தவரை அதிமுகவின் மினி கோட்டை என்றே சொல்லலாம். அங்கே அதிமுக ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்திருக்கிறது. 1989ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக 4 முறையும் திமுக மூன்று முறையும் வெற்றி கண்டுள்ளன. இச்சூழலில் நமது டாப் தமிழ் நியூஸ் செய்தியாளர்கள் தொகுதி மக்களின் மனதை அறிய கருத்துக்கணிப்பு நடத்தினார்கள். அதன் முடிவுகள் பின்வருமாறு…
முன்பே சொன்னது போல இது அதிமுகவின் கோட்டை என்பதையே மக்களின் ஆதரவு உணர்த்துகிறது. பெரும்பாலோனோர் அதிமுகவுக்கே வாக்களிப்போம் என்கிறார்கள். இருந்தபோதிலும், ஜெயலலிதா மறைந்த பிறகு சோகத்தில் இருப்பதை அறிய முடிகிறது. அம்மா போன பிறகு யாருக்கு ஓட்டு போடனும்னு தெரியல; நல்லது செய்ற கட்சிக்கு ஓட்டு போடலாம்னு இருக்கோம் என ஒருசில மக்கள் கூறுகின்றனர்.
மூன்றாவது அணியில் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு டிடிவி தினகரன், விஜயகாந்த், சகாயம், சீமான் ஆகியோரின் பெயர்கள் பெயரளவில் அடிபட்டன. பெரும்பான்மையாக அதிமுகவுக்கே தங்களது ஆதரவு என கூறினர். மீண்டும் அதிமுக வெல்வதற்கே வாய்ப்பிருக்கிறது. (கருத்துக்கணிப்பின் மேற்படி விவரங்கள் வேண்டுவோர் கீழே உள்ள வீடியோவை காணலாம்)