புதிர் போடும் கரூர் மக்கள்… முந்தப்போவது முன்னாள் அமைச்சரா? இந்நாள் அமைச்சரா? #karur
கரூர்… பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல என்பது போன்ற ஒரு தொகுதி. அடிதடிகள், முட்டல் மோதல்கள் என தினந்தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அந்தளவிற்கு பதற்றமான தொகுதியாகப் பார்க்கப்படுகிறது. திமுகவில் செந்தில் பாலாஜியும் அதிமுகவில் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரும் சமபலத்துடன் மோதிக் கொள்வதே அதற்குக் காரணம். வெற்றிபெறுவதை அவர்களின் கௌரவ பிரச்சினையாகக் கருதுகிறார்கள். தேர்தல் அறிவிப்பு வந்தததிலிருந்தே லைம்லைட்டில் இருக்கிறார் செந்தில் பாலாஜி. இருவரும் மாறி மாறி புகார் கூறிவருகின்றனர். இந்தத் தொகுதி யாருக்குச் சாதகமாக இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
1952ஆம் ஆண்டிலிருந்து 2016 வரை நடைபெற்ற தேர்தல்களில் அதிமுகவே 8 முறை வென்றிருக்கிறது. நான்கு முறை காங்கிரஸும் மூன்று முறை திமுகவும் வென்றுள்ளன. கொங்கு பெல்ட் என்பதால் அதிக முறை அதிமுக வென்றிருக்கிறது. தற்போது திமுக சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜி 2006,2011 ஆகிய தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். தலைமையின் அதிருப்தியால் அங்கிருந்து அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட, எம்ஆர் விஜயபாஸ்கர் கரூரில் போட்டியிட்டு பார்டரில் பாஸ் ஆகி அமைச்சரானார்.
மற்ற தொகுதிகளைப் போலவே திமுக-அதிமுக என்ற இருமுனைப் போட்டியே நிலவுகிறது. தவிர, செந்தில் பாலாஜி-எம்ஆர் விஜயபாஸ்கர் எனும் இருப்பெரும் மலைகளுக்கு இடையேயான போட்டியாகவும் கவனம் பெறுகிறது. மக்கள் மனதில் என்ன இருக்கிறது, இவர்கள் இருவருக்கு வாக்களிப்பார்களா அல்லது மூன்றாம் அணியை நாடுவார்களா என்ற நிலவரத்தை அறிய களத்தில் நமது குழு இறங்கியது. அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதிக்கு செய்துள்ளதாக பெரும்பான்மையானோர் சொல்கிறார்கள். அதேபோல திமுகவுக்கும் பெரும்பான்மையானோர் ஆதரவு கொடுக்கின்றனர்.
மூன்றாம் அணியில் சீமானை விட கமலுக்கு அதிகமானோர் வாய்ப்பளிக்கின்றனர். டிடிவி தினகரனை யாரும் உச்சரிக்கவில்லை. ஒருவர், பாஜகவுக்கு வாக்களிப்பேன் என்று கூறிவிட்டு, அதனுடன் கூட்டணியில் இருக்கும் அதிமுக ஆட்சி எதுவுமே செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டினார். அதுமட்டுமில்லாமல் பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பதாகக் கூறிவிட்டு பாஜகவுக்கு வாக்களிப்பேன் என்றார்.
கருத்துக்கணிப்பின் முடிவில் அதிமுகவும் திமுகவும் சமபலத்துடன் இருப்பது தெரியவருகிறது. குறிப்பாக இன்னொரு விஷயத்தையும் சொல்லியேயாக வேண்டும். பெரும்பான்மையான மக்கள் தங்கள் ஆதரவை வெளிப்படையாகச் சொல்லாமல், அதிமுக மீதான அதிருப்தியை மட்டும் கூறுகிறார்கள். இதை வைத்துப் பார்க்கையில் திமுக இத்தொகுதியைக் கைப்பற்றும் என்பது புலப்படுகிறது. இறுதி முடிவு மக்கள் விரல் நுனியில்… செந்தில் பாலாஜி லீடிங்கில் இருக்கிறார்! (முழு கருத்துக்கணிப்பை காண மேலே வீடியோவில் பாருங்கள்)