• April
    24
    Wednesday

Main Area

Main



ஹோலி வட இந்தியாவிற்கு சொந்தமானதா ? - வண்ணத்திருவிழாவின் வண்ணமயமான வரலாறு

ஹோலி
ஹோலி
Loading...


நாடு முழுவதும் வண்ணமயமான ஹோலிப்பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. வசந்தகாலத்தை உற்சாகமாக வரவேற்கும் விதமாக கொண்டாடப்படுவது தான் ஹோலி. ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளைத் தூவிக்கொண்டும், வண்ண நீரைப் பீய்ச்சி அடித்துக் கொண்டும் கொண்டாடும் இந்த ஹோலியை விரும்பாதவர்கள் யாரேனும் இருக்க முடியுமா என்ன?

ஹோலி வரலாறு 

ஹோலிப் பண்டிகை வசந்தத்தை வரவேற்கும் கலாசாரப் பண்டிகை மட்டுமல்ல. இதில் புராணக் கதைகளும்  உள்ளன. நாராயணனின் தீவிர பக்தரான பிரகலாதனைக் கொல்ல இரண்யனின் தங்கை ஹோலிகா முயற்சி செய்தாள். அவளை கட்டியணைப்பவர் யாராக இருந்தாலும் தீயில் அழிந்துபோவார்கள் என்ற நிலையில் ஹோலிகா, குழந்தை பிரகலாதனை கட்டியணைத்துப் பொசுக்க எண்ணினாள். நாராயணனின் ஆசியால்  குழந்தையைத் தழுவியதும் அந்த ஹோலிகாவே எரிந்து போனாள். `அசுர குணம் படைத்த ஹோலிகா மறைந்த நாளே மக்களால் ஹோலிப் பண்டிகையாக உருவானது’ என்று புராணங்கள் கூறுகின்றன.

ஹோலி

ஹோலிப் பண்டிகை நாளில் ஹோலிகாவை துணி மற்றும் காகிதங்களால் ஒரு பொம்மையாக உருவாக்கி, விழா முடியும் நேரத்தில் அதைத் தீயிட்டு எரிப்பது வட நாட்டவர் வழக்கம். 'தீமைகள் அழிந்து போகட்டும் இந்த நாளில்' என்று அப்போது மக்கள் கூடி, குரல் எழுப்புவார்கள். 

கிருஷ்ண அவதாரத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணரும், ராதையும் மகிழ்ந்து கொண்டாடிய திருவிழா ஹோலி என நம்பப்படுகிறது.  சிவந்த நிறம் கொண்ட ராதையை கண்ணன் நீல நிறம் கொண்ட வண்ணத்தைத் தூவி தன்னைப்போலவே நிறமாக்கி மகிழ்ந்தாராம். இதனால், சந்தோஷ ஊடல் கொண்ட ராதை, கண்ணனை மலர்ச்சென்டால் அடித்தாராம். இந்த நிகழ்வை இன்றும் வடநாட்டில் பல பகுதிகளில் தம்பதியர்கள் ஒருவரை ஒருவர் மலர்ச்செண்டால்  அடித்துக் கொண்டு மகிழ்வார்கள். 

தமிழர்கள் கொண்டாடும் ஹோலி 

ஒவ்வொரு வருடமும் மாசி மாத பௌர்ணமி தினத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. வட நாட்டில், முக்கியமாக குஜராத்தில் ஹோலி ஐந்து நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.  தமிழகத்திலும் வடநாட்டினர் வசிக்கும் பகுதிகளில் உற்சாகமாக ஹோலி கொண்டாடப்படும். இந்த நிலை அப்படியே பரவி, இப்போது நகரங்களில் இளைஞர்கள் பெரும்பாலானோர் விரும்பி ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். யார் மீது யார் வேண்டுமானாலும் வண்ணம் பூசி வாழ்த்துகளைத் தெரிவிக்கலாம் என்பதால் பேதங்களை மறந்து சமத்துவம் பாராட்டும், அன்பை பரப்பும் விழாவாக ஹோலி கொண்டாடப்படுகிறது.

ஹோலி

ஆனால், தமிழகத்தில் வடஇந்திய கலாச்சாரங்கள் பண்டிகைகள் புகுத்தப்படுகின்றன என்ற ஒரு குற்றச்சாட்டு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. தமிழ் பண்டிகைகளைப் புறக்கணித்து விட்டு இளைஞர்கள் வட இந்திய பண்டிகைகளுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், பண்டிகைகள் என்பதே கொண்டாடத் தானே. நம் கிராமங்களில் திருவிழா முடிந்த பின்பு மஞ்சள் தண்ணீர் விழா கொண்டாடப்படுவதும் இதே ஹோலியின்  கருத்தியலில் தான். காரண காரியங்கள் எதுவாகினும் பண்டிகைகள் கொண்டாடப்படுவதன் முக்கிய நோக்கமே மகிழ்வாய் இருப்பதும், அன்பைப் பரிமாறிக்கொள்ளவும் தான். அது எந்த பகுதி பண்டிகையாக இருந்தால் என்ன?

பிறகு என்ன, வண்ணங்களில் அன்பைக் கலந்து தூவுங்கள். ஹோலி வாழ்த்துகள்.

2018 TopTamilNews. All rights reserved.