விநாயகரை வணங்க எதை படைப்பது ?
கடவுள்களில் மிக எளிமையானவர் விநாயகர். இந்த உருவத்தில்தான் அவரை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதில்லை. எந்த உருவத்திலும் அவரை பிரதிஷ்டை செய்யலாம் என புராணங்கள் இதிகாசங்கள் சொல்கின்றன.
சாதாரணமாக வீடுகளில் இருக்கும் மஞ்சள் கொண்டு விநாயகரை பிடித்து வழிபட முடியும். பசுஞ்சாணத்தில் பிடிக்கப்படும் பிள்ளையார் இன்னும் விஷேசம்.
பிள்ளையாரை வணங்க கோயில்களுக்கு செல்ல வேண்டும் என்பதில்லை, அரச மரம் இருக்கும் இடமெல்லாம் அவன் இருப்பான் என்கின்றன நமது புராணங்கள். அவ்வளவு எளிமையான கடவுளை எங்கும் வணங்கலாம்.
அதுபோல, விநாயகருக்கு இந்த பொருட்கள்தான் படைக்கவேண்டும் என்பதில்லை. எவ்வளவு எளிமையான பொருட்களைக் கொண்டு வணங்கி மகிழலாம்.
அரிசி, வாழைப்பழம், தேங்காய், வெற்றிலைப் பாக்கு, அருகம்புல். நெல், பொரி, அவல் போதும். வசதி உள்ளவர்கள் பழம், கரும்பு என வசதிக்கு தக்க படைக்கலாம்.
வசதி உள்ளவர்கள் கொழுக்கட்டை, மோதகம் உள்ளிட்ட இனிப்புகளை, பலகாரங்களை செய்து படைக்கலாம். வாழை இலையை விரித்து, அதில் இந்த பொருட்களை வைத்து படைக்க வேண்டும்.
கடைகளில் வாங்கி வந்த களிமண் பிள்ளையாரை, ஒரு சிறிய மனை வைத்து, அதன்மேல் வைத்க வேண்டும். அந்த மனையை நமது விருப்பத்துக்கு ஏற்ப அலங்காரம் செய்து கொள்ளலாம்.
கடைகளில் இருந்து பிள்ளையாரை வாங்கி வரும்போது, வீட்டுக்குள் நுழையும் முன், தாம்பாலத்தில் அரிசி, மஞ்சள், அறுகம்புல் பரப்பு அதன்மீது எடுத்து வைத்து கற்பூரம் காட்டி வழிபட்டு உள்ளே அழைத்து வர வேண்டும்.
அதுபோல மலர் அலங்காரத்தில் ஆடம்பரம் இல்லாதவர் பிள்ளையார். அருகம்புல் மாலை எனில் அவருக்கு கொண்டாட்டம். சாதாரண எருக்கம் பூ மாலைகூட அவருக்கு உகந்தது என்றுதான் புராணங்கள் சொல்கின்றன. இப்படியாக எந்த சிரமங்களும் இல்லாமல் வணங்குவதற்கு ஏற்றவர்தான் பிள்ளையார்.