• June
    19
    Wednesday

Main Area

Main



மதுரை ‘முட்டை இட்லி’ ஐட்டத்தை கண்டு பிடித்த முதலியார் இட்லி கடை!

முதலியார் இட்லி கடை
முதலியார் இட்லி கடை
Loading...

மதுரை கோரிப்பாளையத்தில் தேவர சிலை அருகில் இருக்கிறது இந்த முதலியார் இட்டிலிக்கடை பி.கந்தசாமி முதலியார் என்பவரால் அறுபதுகளில் துவங்கப்பட்ட கடை இது. அரை நூற்றாண்டாக அதே சுவை,அத்தனை வெரைட்டி தந்து அசத்திக்கொண்டு இருக்கிறது மதுரை சாப்பாட்டு ராமன்களை.

mudailiyar idly kadai

சிறிய கடைதான்,கொஞ்சம் நெரிசலாகக்கூட இருக்கும்.பழைய கட்டிடம். ஆனால்,இந்தியாவில் உள்ள எல்லா மொழி லைஃப் ஸ்டைல் சானல்களும், ஃபுட் ப்ரோகிராம்களும் இந்த சின்னஞ்சிறு கடையை கொண்டாடி தீர்த்திருக்கிறார்கள்.

idly

முட்டை இட்லி இவர்களின் கண்டுபிடிப்புகளில் முக்கியமான ஐட்டம்.முட்டை புரோட்டா முரட்டுக் காளை,அதை பிய்த்து சூடான கல்லில் போட்டு கரண்டியால் கொத்தி செய்கிறார்கள் இல்லையா,முட்டை இட்லி அதற்கு நேர் எதிர் என்பதால்,சில சின்னச் சின்ன இட்லிகளை கல்லில் போட்டு முட்டை, வெங்காயம்,மற்றும் மசாலாக்களைப் போட்டு லேசாக புரட்டிவிட்டால் போதும். மல்லி இலைகள் தூவி உங்கள் இலைக்கு வந்ததும்,பக்கத்தில் ஒரு மட்டன் சுக்காவை வைத்துக்கொண்டு லேசாக சால்னா ஊற்றி அந்த முட்டை இட்லியை சாப்பிட்டுப் பார்த்தால் மதுரையை விட்டுக் கிளம்புவதை மறுபரிசீலனை செய்யவேண்டி இருக்கும்.

இங்கே இருக்கும் இட்லியில் முட்டை இட்லி மட்டுமல்ல சிக்கன் முட்டை இட்லி,மட்டன் முட்டை இட்லி,இறால் முட்டை இட்லி என்று அள்ளித் தருகிறார்கள். இதற்கடுத்த சிறப்பு,தோசைகளின் அணிவகுப்பு.

kari dhosai

ஒன்றா இரண்டா,முட்டை கறிதோசை, இறால் கறிதோசை, முட்டை குடல்தோசை,முட்டை அடை தோசை,முட்டை தோசை,அப்புறம் ஆஃப்பாயில் தோசை,எண்ணை தோசை என்று புதுசாய் பல தினுசாய் கிடைக்கிறது. 

இதெல்லாம் மெயின் டிஷ்கள். சைட்டிஷ்கள் பட்டியல் தனி! தலைக்கறி ரோஸ்ட்,மூளை ரோஸ்ட்,காடை ரோஸ்ட்,எக் சிக்கன்,மட்டன் சுக்கா,சிக்கன் சுக்கா,சுவரொட்டி,என்று பெரிய பட்டியலே இருக்கிறது.மதுரை என்றாலே அது அயிரை மீன்களின் சம்ஹார பூமி,அதற்கு கந்தசாமி முதலியார் கடையும் விதி விலக்கல்ல. 

இறாலில் முதலில் நாம் பார்த்தது தவிர,இங்கே இறால் பிரியாணியும் உண்டு. இதைக்கேட்டு வெஜ் பார்ட்டிகள் காண்டாக வேண்டாம்.நீங்கள் விரும்பி சாப்பிடும் குழிப்பணியாரம், அடைதோசை,பொடி தோசை,ஆனியன் தோசை,ஆனியன் டைமன்,மசாலா இட்லி ,சில்லி இட்லி இவற்றுடன் வழக்கமானச்ட்னி சாம்பாருடன் எள்ளுத்துவையல், மல்லித்துவையல், மிளகாய்துவையல் போன்ற ஸ்பைசி சட்னிகளும் உண்டு. அடுத்த முறை மதுரை போனால் முதல் வேலையே முதலியார் கடைக்கு போவதாக இருக்கட்டும்.

2018 TopTamilNews. All rights reserved.