கேரளா: மகரவிளக்கு பூஜைக்கு பிறகு மாசி மாதப் பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.
சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து அங்கு பதட்டமான சூழலே நிலவி வருகின்றது. சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக திறக்கப்பட்ட ஐயப்பன் கோயில் நடை கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி சாத்தப்பட்டது. இதையடுத்து மாதப் பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. இதனால் காவல் துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுத்தபட்டுள்ளனர்.

இது குறித்து கேரள மாநிலக் காவல்துறை வெளியிட்ட அறிக்கையில்,' 'அனைத்து வயதுப் பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபாடு நடத்த அனுமதி அளித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, மகரவிளக்கு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டபோது பல்வேறு பிரிவினர் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே, இந்த முறை பக்தர்களுக்கு எந்தவிதத் தடங்கலும் ஏற்படாத வண்ணம், நிலக்கல்லில் இருந்து கோயில் சன்னிதானம் பகுதி வரை குறிப்பிட்ட தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. பக்தர்களும், செய்தியாளர்களும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குப் பிறகே நிலக்கல்லில் இருந்து அனுமதிக்கப்படுவர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் மகரவிளக்கு பூஜையின்போது கோயிலில் சாமி தரிசனம் செய்த பிந்து, கனகதுர்கா ஆகியோர் மீண்டும் சாமி தரிசனம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.