• May
    26
    Sunday

Main Area

Mainகூடா நட்பு கேடாய் முடியும்; திமுக-வை சீண்டும் சாதிக் பாட்சா நினைவஞ்சலி விளம்பரம்!

சாதிக் பாட்சா (கோப்புப்படம்)
சாதிக் பாட்சா (கோப்புப்படம்)
Loading...

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சாவின் 8-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கொடுக்கப்பட்டுள்ள விளம்பரம் திமுக-வை சீண்டும் வகையில் அமைந்துள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அப்போதைய மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கனிமொழி, ராசா உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

raja

முன்னதாக, இந்த வழக்கில் ஆ.ராசாவின் நண்பரும், கிரீன் ஹவுஸ் ப்ரோமோட்டர்ஸ் நிர்வாகியுமான சாதிக் பாட்சாவிடம் விசாரணை நடத்த சிபிஐ நடவடிக்கை மேற்கொள்ள இருந்தது.

இந்த சூழலில், கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16-ம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் சாதிக் பாட்சா பிணமாகக் கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், திமுக புள்ளிகளின் நெருக்கடியினால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியது. மேலும், அவர் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

kanimozhi

அவரது மரணத்தை தொடர்ந்து, அவர் தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொள்ள தூண்டப்பட்டாரா என பல கேள்விகள் எழுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து எழுந்த பல ஊகங்களுக்கிடையில், விசாரணை நடத்திய சிபிஐ, அவரது மரணம் ஒரு தற்கொலை என கூறியது.

இந்நிலையில், சாதிக் பாட்சாவின் 8-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதற்காக கொடுக்கப்பட்டுள்ள விளம்பரத்தில், "கூடா நட்பு கேடாய் முடியும்...! என்பதற்கு நீ உவமை ஆனாயே...! உன் அன்பு முகம் கூட அறிந்திடா உன் பிள்ளைகள்...!" என நாளிதழில் அவரது குடும்பத்தினர் விளம்பரம் கொடுத்துள்ளனர். இந்த விளம்பரம், திமுக-வை சீண்டும் வகையில் அமைந்துள்ளது.

sadiq

நெருக்கமாக இருந்த திமுக-காங்கிரஸ் உறவில், இரண்டாவது முறையாக அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது கடுமையான விரிசல் ஏற்பட்டது. 2011 தமிழக சட்டமன்ற தேர்தல் காலகட்டத்தில், திமுக-காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற திமுக தலைமையகமான அண்ணா அறிவாலய கட்டடத்தின் மற்றொரு தளத்தில் 2ஜி வழக்கு தொடர்பாக கலைஞர் டிவி அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது திமுக தொண்டர்களை அதிர்ச்சியுற செய்தது.

karunanidhi

அதே ஆண்டில், கனிமொழி ஜாமின் கிடைக்காமல் சிறையில் இருந்த போது, கருணாநிதி தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை. எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் மன நிலையில் நான் இல்லை என அவர் அறிக்கை விட்டிருந்தார். பிறந்தநாளன்று அண்ணா நினைவிடம் வந்து மரியாதை செலுத்திய கருணாநிதியிடம் பிறந்த நாளையொட்டி தொண்டர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கருணாநிதி, "சமுதாய எழுச்சிக்காகவும், அரசியல் மறுமலர்ச்சிக்காகவும், தங்களை ஒப்படைத்துக் கொண்ட தோழர்கள், உடன்பிறப்புகள், "கூடா நட்பு கேடாய் முடியும்" என்ற பொன்மொழியை மறந்து விடாமல் பணியாற்ற வேண்டும்" என்றார்.

மத்தியில் அப்போது ஆட்சியில் இருந்த கூட்டணிக் கட்சியான காங்கிரஸ், ஸ்பெக்ட்ரம் வழக்கில் உதவி செய்யாமல் பாராமுகமாக இருந்து சட்டசபை தேர்தலில் கூடுதல் சீட் கேட்டு நெருக்கடி கொடுத்து, விரும்பிய தொகுதிகளை மிரட்டி வாங்கியதாக எண்ணிய கருணாநிதி, உறவாடி கெடுக்கும் காங்கிரஸ் கட்சியை தான் மறைமுகமாக அவ்வாறு சாடினார் என கூறப்பட்டது. அதன்பிறகு காட்சிகள் மாறி இன்று வரை காங்கிரஸ் கட்சியுடன் திமுக நெருக்கம் காட்டி வருவது வேறு கதை. ஆனால், கருணாநிதி கூறிய "கூடா நட்பு கேடாய் முடியும்" என்ற பழமொழி இன்று வரை பிரபலம்.

எனவே, திமுக-வை சீண்டும் வகையிலேயே சாதிக் பாட்சாவின் நினைவு தினத்தில் இவ்வாறு விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் சமயத்தில், 2ஜி வழக்கு மற்றும் சாதிக் பாட்சாவின் தற்கொலையை திமுக-வுக்கு எதிராக அரசியல் கட்சிகள் கையில் எடுப்பது வழக்கம். தற்போது திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் வைகோ கூட, சாதிக் பாட்சா கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையை, தற்கொலை என்று மறைத்து நாடகம் நடந்து வருகிறது என கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2018 TopTamilNews. All rights reserved.