• July
    18
    Thursday

Main Area

Main



மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டி; சுமலதா அம்பரீஷ் அறிவிப்பு!

கணவர் அம்பரீஷுடன் சுமலதா (கோப்புப்படம்)
கணவர் அம்பரீஷுடன் சுமலதா (கோப்புப்படம்)
Loading...

பெங்களூரு: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடவுள்ளதாக கன்னட நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அம்பரீஷின் மனைவியும் நடிகையுமான சுமலதா அறிவித்துள்ளார்.

கன்னட நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அம்பரீஷ் அண்மையில் காலமானார். அம்பரீஷின் சொந்த‌ தொகுதியான மண்டியாவில் அவரது மனைவியும், நடிகையுமான சுமலதா, மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார்.

ஆனால், இதற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், அந்தத் தொகுதியில் தமது மகன் நிகில் கவுடாவை களமிறக்கவும் குமாரசாமி திட்டமிட்டுள்ளார். இதனால், கூட்டணிக் கட்சியான காங்கிரஸிடம் அந்த தொகுதியை எக்காரணம் கொண்டும் விட்டுத்தர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இதுகுறித்து பேசிய சுமலதா, நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடலாமா?, வேண்டாமா? என்று ஆலோசித்து வந்தேன். இதுபற்றி எனது கணவர் இருந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர்களிடமும் பேசினேன். ஆனால் காங்கிரஸ் கூட்டணியில் மாண்டியா தொகுதியை மதசார்பற்ற ஜனதாதளத்திற்கு காங்கிரஸ் கட்சி கொடுத்து விட்டது. இருப்பினும் மாண்டியா மக்களும், அம்பரீசின் ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து என்னை மாண்டியா தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

எனவே, மாண்டியா தொகுதியில் போட்டியிடுவது உறுதி. ஆனால் நான் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறேனா? அல்லது சுயேட்சையாக போட்டியிடுகிறேனா? என்பது தெரியவில்லை. ஆனால், கண்டிப்பாக போட்டியிடுவேன் என்றார்.

அதேபோல், பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு தொகுதியில் சீட் தர காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் முன்வந்தது. ஆனால், அதனை சுமலதா மறுத்து விட்டார். தனது கணவரின் பாரம்பரிய மாண்டியா தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதே சுமலதாவின் விருப்பமாக இருந்தது. அந்த மரபை விட்டு தரவும் அவர் முன்வரவில்லை.

இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடவுள்ளதாகவும், நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல் செய்யவிருப்பதாகவும் சுமலதா அறிவித்துள்ளார்.

மாண்டியா மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப நான் இந்த தொகுதியில் போட்டியிடவுள்ளேன். மக்களின் கோரிக்கைக்கு நான் தலைவணங்கி இங்கு நான் போட்டியிடவுள்ளேன். தோற்றுப்போவதை பற்றி எனக்கு பயமில்லை என்றும் சுமலதா தெரிவித்துள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.