• May
    21
    Tuesday

Main Area

Mainஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்: புஜாரா சதம்; இந்திய அணி திணறல்

pujara
pujara
Loading...

-குமரன் குமணன்

 

அடிலெய்ட்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 250 ரன்களை எடுத்து உள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் நகரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கம் முதலே இந்திய அணி ரன் எடுக்க முடியாமல் திணறியது.

ராகுல் 2 ரன்களுக்கும், முரளி விஜய் 11 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே களம் புகுந்த கேப்டன் கோலி 3 ரன்களும், ரஹானே 13 ரன்களும் எடுத்து வெளியேறினர். கடந்த முறை இதே அடிலெய்டில் இதே போன்ற தொடரின் முதல் போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் கோலி 115 மற்றும் 141 ரண்களை பதிவு செய்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும். அப்படி ஒரு ஆட்டத்தை எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

அடுத்தாக வந்த ரோகித் ஷர்மா நம்பிக்கை அளிக்கும் விதத்தில் 61 பந்துகளை எதிர்கொண்டு 37 ரண்கள் சேர்த்தார். ஆட்டமிழப்பதற்கு முந்தைய பந்தில் மார்கஸ் ஹாரிஸ் என்கிற வீரரை மீறி பந்து சிக்சருக்கு சென்றிருக்க அடுத்த பந்திலேயே மீண்டும் தூக்கி அடித்ததால் அதே ஃபீல்டரின் கையில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் பங்கேற்ற எந்த போட்டியிலும் விக்கெட் வீழ்த்தாமல் இருந்ததில்லை என்ற நிலையில் இருந்த அந்த நகரை சேர்ந்த நேதன் லியேன் ரோகித் ஷர்மா விக்கெட்டை வீழ்த்தினார்.

அடுத்து வந்த ரிஷப் பண்ட் லியேனின் சுழலில் வீழந்த இரண்டாவது நபரானார். மிக சிக்கலான சூழலில் அருமையான ஒரு பந்தில் டிம் பெய்னிடம் கேட்ச் ஆகி வெளியேறினார் பண்ட். இந்தியா பந்து வீசும்போது ஓரு கீப்பராக பண்ட் இவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை, அவருக்கே அவர் ஆட்டமிழந்த விதம் நினைவூட்டியிருந்தால் நல்லது.

இப்படி ஒரு முனையில் ஒவ்வொருவராக வீழ்ந்து கொண்டே வர, மறு முனையில் "மனித உருவில் நங்கூரம்" ஆகி நின்றார் புஜாரா. அதுவரை அவருக்கு கிடைக்காத கூட்டணி அஷ்வின் மூலம் கிடைத்தது .76 பந்துகள் வரை தாக்குப்பிடித்த அஷ்வின், ஓரு பவுண்டரியுடன் 25 ரண்கள் எடுத்தார். அடுத்து வந்த இஷாந்த் ஷர்மா ,தன்னால் முடிந்த அளவு புஜாராவுக்கு ஒத்துழைப்பு அளித்து 20 பந்துகளை எதிர்கொண்டு 4 ரண்கள் எடுத்து ஸ்டார்க் பந்துவீச்சில் அவுட்டானார்.

இதற்கெல்லாம் சற்றும் கலங்காது விளையாடிய புஜாரா, சதம் அடித்தார். ஆட்டத்தின் பதிமூன்றாவது பந்தில் களம் புகுந்த புஜாரா சதம் அடித்ததோடு நில்லாமல், 87ஆம் ஓவரின் ஐந்தாம் பந்து வரை நிலைத்து நின்று ஆடி சரிந்து கொண்டிருந்த அணியை கிட்டத்தட்ட தனி நபராக தூக்கி நிறுத்திய பின்னரே 123 ரன்களில் ஆட்டமிழந்தார். ரண் அவட் ஆக்கப்பட்டவுடன் இன்றைய ஆட்ட நேரம் முடிவுற்றது.

டெஸ்ட் போட்டிகளில் 16 சதம் விளாசியுள்ள புஜாரா 5 ஆயிரம் ரண்களையும் முதல் தர கிரிக்கெட்டில் 14000 ரண்களையும் கடந்தார்.

இஷாந்துக்கு பின் களம் பகுந்த ஷமி 9 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் களத்தில் உள்ளார் .கடைசி பேட்ஸ்மேனான பும்ரா நாளை காலை அவருடன் இணைவார் .இந்த ஜோடியை ஆஸ்திரேலியா விரைவில் பிரித்து இந்திய இன்னிங்ஸை முடித்து விடவே சாத்தியங்கள் அதிகம். இரண்டாம் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது.

2018 TopTamilNews. All rights reserved.