ஹிஜாப் சர்ச்சை... பதைபதைக்கும் பெங்களூரு.. 144 தடை உத்தரவு அமல்!

 
பெங்களூரு

ஹிஜாப் சர்ச்சையால் கடந்த சில வாரங்களாக கர்நாடகா மாநிலமே ஒருவித கொதிநிலையில் இருக்கிறது. சில நாட்களுக்கு முன் ஹிஜாப் அணிந்து தனியாக வந்த முஸ்கான் என்ற இஸ்லாமிய மாணவியை காவி துண்டு அணிந்த இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் ஜெய் ஸ்ரீராம் கோஷமிட்டு அச்சுறுத்தினர். பதிலுக்கு அந்த மாணவியும் அல்லாஹு அக்பர் என கர்ஜித்தார். இந்த வீடியோ தேசிய அளவில் கவனம் பெற்றது. இந்துத்துவ அமைப்புகளுக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்தன.

அதேபோல அன்றைய தினமே கல்லூரி ஒன்றில் மாணவர் ஒருவர் தேசியக்கொடியை கீழிறக்கி காவிக் கொடியை ஏற்றினார். இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாக இந்துத்துவ அமைப்புகள் ஏன் இந்தளவிற்கு காட்டுமிராண்டித்தனமாக இருக்கிறார்கள் என நெட்டிசன்கள் கேள்வியெழுப்பினர். இதற்குப் பின் பல்வேறு மாவட்டங்களிலுள்ள பள்ளி, கல்லூரிகளிலும் பதற்ற நிலை உருவானது. இதன் காரணமாக மேல்நிலைப் பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு மூன்று நாட்கள் விடுமுறையை அறிவித்தது.

வீரமங்கை முஸ்கானுக்கு தமுமுகவின் பாத்திமா ஷேக் விருது வழங்கப்படும் என  அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இந்துத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  தட்சிண கன்னடா, உடுப்பி, பாகல்கோட்டை, குடகு, சிவமொக்கா ஆகிய பகுதிகளிலும் போராட்டம் வலுத்துள்ளது. உடுப்பியில் இந்து, இஸ்லாமிய மாணவர்கள் தனித்தனியாக நடத்திய போராட்டத்தில் மோதல் ஏற்பட்டு கல்வீச்சு தாக்கல் நிகழ்ந்தது. இதன் காரணமாக சிவமொக்கா, தாவனகெரே உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதேபோல மண்டியா, மைசூருவிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Telangana: Women in Hyderabad protest against Hijab ban in educational  institutions in Karnataka

19 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் முன்பு போராட்டம் வெடித்துள்ளது. இருப்பினும் மாநில தலைநகரான பெங்களூருவில் இதுவரை போராட்டம் நடக்கவில்லை. இருந்தாலும் பதற்ற நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிப்.22ஆம் தேதி வரை பெங்களூருவில் உள்ள பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்களை சுற்றி 144 தடை உத்தரவை அமல்படுத்தியிருக்கிறது மாநகர காவல் துறை. கல்வி நிறுவனங்களை சுற்றியுள்ள 200 மீட்டர் தூரத்திற்கு யாரும் கூடவோ போராட்டம் நடத்தவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.