6 பாகிஸ்தான் யூடியூப் சேனல்கள் உள்பட 16 சேனல்கள் முடக்கம்: தவறான தகவலை பரப்பியதால் மத்திய அரசு நடவடிக்கை..

 
youtube


தவறான தகவல்களை பரப்பிய பாகிஸ்தானைச் சேர்ந்த் 6 யூடியூப் சேனல்கள் உள்பட 16 யூடியூப் சேனல்களை,  இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் முடக்கியுள்ளது.  

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள், பொது ஒழுங்கை சீர்குலைக்கும்  வகையில்  தவறான கருத்துக்களை பரப்பி வரும் சமூக வலைதள பக்கங்கள் மற்றும் யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கி வருகிறது. அந்தவகையில்  அண்மையில் கூட தவறான தகவல்களை பரப்பியதாக 22 யூடியூப் சேனல்களுக்கு இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்  தடை  விதித்து அதிரடி  நடவடிக்கை எடுத்திருந்தது.

youtube

அதனைத்தொடர்ந்து தற்போது  இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்பட்டு வரும் மேலும் 16 யூடியூப் சேனல்களை  மத்திய அரசு  முடக்கியுள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்ட வழிகாட்டுதல் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகளின் கீழ் அவசர கால அதிகாரங்களைப் பயன்படுத்தி மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்து  வருகிறது.  

மத்திய அரசு

இந்த 16 யூடியூப் சேனல்களும் இந்தியாவில் பீதியை உருவாக்கவும், பொது ஒழுங்கை சீர்குலைக்கவும், தவறான மற்றும் சரிபார்க்கப்படாத தகவல்களை பரப்பியதாக தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  தடைசெய்யப்பட்ட இந்த கணக்குகளில்  இந்திய யூடியூப் சேனல்கள் 10   மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த 6 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்த சேனல்களில் உள்ள வீடியோக்கள் , 68 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.