இடுக்கியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு - 2 பேர் பலி

 
landslide

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். 

தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கேரளாவில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் கனமழை கொட்டி வருகிறது. இதனிடையே வானிலை ஆய்வு மையம்  நாளை வரை கனமழைக்கான 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுத்துள்ளது. இடுக்கி மாவட்டம் ஏலப்பாறை அருகே கோழிக்கோனத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பாக்கியம் என்ற பெண் உயிரிழந்தார். இதேபோல் மூணாறு அருகே வெள்ளத்தூவல் முதுவான்குடி பகுதியில் மண் திட்டு விழுந்து பவுலோஸ் என்பவர் உயிரிழந்தார். 
  

இதேபோல் கல்லார் பகுதியில் உள்ள கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை பாறைகள் சரிந்து விழுந்ததால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. அதே வழித்தடத்தில் அடிமாலி சீயப்பாறை நீர்வீழ்ச்சி அருகே மரங்கள் சரிந்து சாலையில் விழுந்ததில்,  போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, நெடுங்கண்டம் அருகே தூக்குப்பாலம், பாலகிராமம், கல்லார்- மாங்குளம் ரோட்டில் பீச்சாடு பகுதிகளில்  மின்சாரம் துண்டிக்கப்பட்டது.இதனிடையே பொதுமக்களுக்கு உதவும் வகையில் இடுக்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தேவிகுளம், உடும்பன்சோலை, பீர்மேடு, தொடுபுழா தாலுகா அலுவலகங்களில்  24 மணி நேர கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.