ஒடிசா ரயில் விபத்து எதிரொலி - இன்றும் 24 விரைவு ரயில்களின் சேவை ரத்து

 
train

ஒடிசா ரயில் விபத்தின் எதிரொலியாக தென் கிழக்குப் பகுதியில் இயங்கும் 24 விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.

நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்தின் துயரத்தில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. கடந்த 2ம் தேதி இரவு 7 மணியளவில்  மேற்கு வங்கத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில்,  ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பஹனாகா பஜார்  ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, மாற்று தண்டவாளத்தில் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டு அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்துள்ளது. அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு கிடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் மீது மின்னல் வேகத்தில் மோதியது. அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிய இந்த பயங்கர விபத்தில், 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1,175 பேர் காயமடைந்துள்ளனர். ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,  ஒடிசா ரயில் விபத்தின் எதிரொலியாக தென் கிழக்குப் பகுதியில் இயங்கும் 24 விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. தென் கிழக்குப் பகுதியில் இயங்கும் 24 விரைவு ரயில்களின் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.