ஒரே நபரின் பெயரில் 10 சிம்கள் இருந்தால் 3 ஆண்டுகள் சிறை!
ஒரே நபரின் பெயரில் 10 சிம்கள் இருந்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டம் அமலுக்கு வந்தது.

போலி செல்போன் அழைப்புகள் மூலம் நாள்தோறும் ஏராளமான மோசடிகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்களும் அதிகம் அரங்கேறி வருகின்றன. இதுபோன்ற குற்ற சம்பவங்களுக்கு பல செல்ஃபோன் எண்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் குற்றவாளிகளை பிடிப்பது சைபர் கிரைம் போலீஸாருக்கு கடும் சவாலாக அமைந்துள்ளது. காரணம் அந்த செல்போன் எண்கள் அனைத்தும் போலி ஆவணங்கள் மூலம் வாங்கப்பட்டது ஆகும். இருப்பினும் இது தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் இருப்பதால், மாநில சைபர் கிரைம் போலீஸார் நடவடிக்கை தொடங்கி, விவரங்களைச் சேகரித்து வந்தனர். அதன்படி புகார்கள் வந்துள்ள செல்போன் எண்களின் விவரங்களை, அந்தந்த சிம் கார்டு நிறுவனங்களுக்கு அனுப்பி அவற்றை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். போலி அடையாள அட்டைகளை கொண்டு வாங்கும் சிம் கார்டுகள் மோசடிகளுக்கு மட்டுமின்றி, தீவிரவாத செயல்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

இதனை கட்டுப்படுத்த ஒரு தனிநபர் பெயரில் 10 சிம்கார்டுகள் வைத்திருந்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கும் புதிய சட்டம் அமலானது. குற்றம் முதன்முறையாக கண்டறியப்பட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும், அதன்பிறகும் தொடர்ந்தால் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


