மூடப்பட்ட 32 விமான நிலையங்கள் திறப்பு!
போர் பதற்றம் காரணமாக வடமாநிலங்களில் மூடப்பட்ட 32 விமான நிலையங்களை திறக்க ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.
காஷ்மீர் அருகே பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதனையடுத்து பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இதனால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவியதோடு, போர் உருவாகும் நிலை ஏற்பட்டதால் பாதுகாப்பு கருதி எல்லையோர மாநிலங்களில் உள்ள 32 விமான நிலையங்கள் மூடப்பட்டன.
இந்த நிலையில், போர் பதற்றம் காரணமாக வடமாநிலங்களில் மூடப்பட்ட 32 விமான நிலையங்களை திறக்க ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் தொடர் தாக்குதல் மற்றும் போர் பதற்றம் காரணமாக வருகிற 15ஆம் தேதி வரை 32 விமான நிலையங்களை மூட உத்தரவிடப்பட்டிருந்தது. தற்போது சண்டை நிறுத்தப்பட்டதை அடுத்து 32 விமான நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளன.


