5 மாநிலத் தேர்தல் : பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி.. பேரணிகளுக்கு தடை.- தேர்தல் ஆணையம் அறிவிப்பு..

 
தேர்தல் ஆணையம்


5 மாநில சட்டப்பேரவைத்  தேர்தல் பரப்புரை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பேரணிகள் மற்றும் வாகன பிரச்சாரங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.  அதேநேரம் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதியளித்து இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம்,  உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா  மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது.  பிப்ரவரி 10 ஆம் தேதி  தொடங்கும் தேர்தல் மார்ச் 7 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதையொட்டி,  சட்டமன்ற  தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.  இதில் மிகப்பெரிய  மாநிலமான  உத்தரபிரதேசத்தில் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கும்  7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

5 மாநில தேர்தல்

உத்தரகாண்ட், கோவா  ஆகிய மாநிலங்களுக்கு  ஒரே கட்டமாக பிப்.14ஆம் தேதியும், பஞ்சாப்பில்  பிப்.20-ஆம் தேதியும், மணிப்பூரில்  பி.27 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகவும்  வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  கொரோனா பரவல் காரணமாக ஏற்கனவே 5 மாநிலங்களுக்கும் 16 அம்சங்கள் கொண்ட  வழிகாட்டு நெறிமுறைகளை  தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது.

அதில், வாகனப் பிரச்சாரம், பேரணிகள், பொதுக்கூட்டங்கள்  நடத்த ஜனவரி 31  அனுமதி இல்லை என்றும்,  வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்ய 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக தெரிவித்திருந்தது.  பின்னர் கட்டுப்பாடுகள் பிப்ரவரி 11 வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று ( சனிக்கிழமை) மத்திய சுகாதாரத்துறை அமைச்சருடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது.   அதன்பின் வெளியிடப்பட்ட அறிவிப்பில்,   சாலை மற்றும் வாகன பேரணி நடத்த தடை நீட்டிக்கப்படுவதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரணி

  அதேபோல்  இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை பிர்ச்சாரம் மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடையும் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.  ஆனால் உள்  அரங்குகள் மற்றும் பொதுவெளியில் நடத்தப்படும்  கட்சிக் கூட்டங்களுக்கு  அனுமதி அளிக்கப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திறந்தவெளி மைதானத்தில் 30% பார்வையாளர்களுடனும்,  உள் அரங்குகளில் 50 % ஆட்களுடனும் பிரச்சாரங்கள் நடத்தலாம் என கூறப்பட்டுள்ளது.