அந்தமான் நிகோபரில் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம் - மக்கள் பீதி..

 
நிலநடுக்கம்

அந்தமான் நிகோபார் தீவுகளில் ஒரே நாளில் 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

உலகின் பல்வேறு பகுதிகளில்  அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. துருக்கி, சிரியாவில் கோர தாண்டவம் ஆடிய நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பறிபோன வடுவே நம்மில் பலருக்கு இன்னும் மறையவில்லை.  இந்த நிலையில் அந்தமான் நிகோபர் தீவுகளில் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்தத் தீவில் உள்ள கேம்பெல் என்ற பகுதியின் வடக்கில் முதலில் நேற்று நண்பகல் 1.15 மணி அளவில் சுமார் 10கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 4.9 ஆக பதிவானது. தொடர்ந்து பிற்பகல் 2.59 மணி அளவில்  4.1 என்கிற அளவுகோளில்  அதே 10கிமீ ஆழத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.  

அந்தமான் நிகோபர் தீவில் 6 முறை  நிலநடுக்கம்..

3 மற்றும் 4வது முறைகளில் முறையே  5.3 ,  5.5 என்கிற ரிக்டர் அளவுகோளில்  சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மீண்டும் இன்று அதிகாலை 1.07 மணியளவில் அந்தமானின் திலிபூரில் இருந்து 35 கி.மீ தொலைவில், 15 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த நிலையில் அதிகாலை 2.26 மணிக்கு கேம்பெல் பே என்ற இடத்தில் இருந்து 220 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில்   6வது முறையாக   நிலநடுக்கம் ஏற்பட்டது.   4.6 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியிருந்த இந்த நடுக்கத்தால் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.  அதேபோல் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.  அடுத்தடுத்து 6 முறை  நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.