அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமான படையில் சேர 7.49 லட்சம் பேர் விண்ணப்பம்..

 
அக்னிபாத் திட்டம்

அக்னிபாதை திட்டத்தின் கீழ் விமான படையில் சேர 7.49 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தற்காலிகமாக ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும்  அக்னிபாதை  எனும்  திட்டத்தை , மத்திய அரசு கடந்த 14ம் தேதி அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் அக்னி வீரர்கள்  4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் ,  ராணுவத்தில் பணிபுரிவர்.   இந்த  தற்காலிக பணி வழங்கும் அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.  பீஹார், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்  ரயில்களுக்கு தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது.   அக்னிபாத்  திட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி  நாடு முழுவதும், காங்கிரஸ் உள்ளிட்ட  பல்வேறு கட்சிகள் சார்பிலும்  போராட்டங்கள்  நடத்தப்பட்டன.  ஆனாலும் அக்னிபாத்  திட்டத்தை திரும்பப்பெற முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.  

விமானப்படை

அதேநேரம் இந்த திட்டத்தின் கீழ் முப்படைகளிலும்  ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.  எதிர்ப்புகள் கிளம்பியதை வைத்து பார்த்தால் இத்திட்டத்தின் கீழ்  ராணுவத்தில் சேர இளைஞர்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விண்ணப்பம் தொடங்கிய நாள் (  கடந்த 24ம் தேதி ) முதலே ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன்  விண்ணப்பித்து வருகின்றனர்.  அதிலும் குறிப்பாக  அக்னிபாதை திட்டத்தின் கீழ் விமான படையில்  சேருவதற்கு முதல் நாளில் 3 ஆயிரத்து 800 பேர் விண்ணப்பித்ததாக விமான படை தெரிவித்திருந்தது.  இத்திட்டத்தின் கீழ்  ராணுவத்தில் சேருவதற்காக தகுதியானவர்கள் விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூன் 24ம் தேதி தொடங்கிய நிலையில்  நேற்றுடன் முடிவடைந்தது.

அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமான படையில் சேர 7.49 லட்சம் பேர் விண்ணப்பம்..

இந்நிலையில்  அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர  நேற்று வரை 7.49 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. கடந்த காலத்தில்  6,31,528 விண்ணப்பங்கள் வந்ததாகவும்,  அத்துடன் ஒப்பிடுகையில், இந்த முறை மிக அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனதாகவும் கூறியுள்ளது.  அதாவது இந்த முறை அக்னிபாத் திட்டத்தின் கீழ்  7,49,899 பேர் விண்ணப்பித்துள்ளதாக   இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.  விண்ணப்பித்துள்ளவர்களில்   தகுதி பெற்றவர்களுக்கு அடுத்த மாதம் தேர்வு நடத்தப்படும் என்று  கூறப்பட்டுள்ளது,