ம.பியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 9 சிறுவர்கள் பலி..
மத்திய பிரதேசம் மாநிலத்தில் கோயில் சுவர் இடிந்து விழுந்து 9 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டத்தின் ஷாபூர் பகுதியில் உள்ள ஹர்தவுல் பாபா கோயிலில் சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். இந்த நிலையில் நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். இந்த அரங்கம் சும்கார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனவும், தொடர் கனமழை காரனமாக இடிந்து விழுந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து குறித்து சாகர் பகுதி காவல் ஆணையர் வீரேந்திர சிங் ராவத் கூறியதாவது, விபத்தில் உயிரிழந்த அனைவரும் 10 முதல் 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் என்று தெரிவித்தார். மேலும் சிறுவர்கள் உள்பட பலர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஆட்சியர் தீபக் ஆர்யா கூறியுள்ளார். தொடர்ந்து மீட்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் விபத்து குறித்து வருத்தம் தெரிவித்த முதல்வர் மோகன் யாதவ், விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் மீண்டுவர வாழ்த்துவதாகவும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொண்டார். மேலும் அரசு சார்பில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.


