குவைத்தில் இருந்து ஆந்திரா வந்த இளம்பெண்ணுக்கு பி.எஃப் 7 கொரோனா தொற்று உறுதி

 
BF 7

குவைத்தில் இருந்து ஆந்திரா திரும்பிய இளம்பெண் ஒருவருக்கு பி.எஃப்.7 வகை கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவை அச்சுறுத்தி வரும் பி.எஃப்.7 வகை கொரோனா மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு,  மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. சீனாவில் வேகமாக பரவும் பி எஃப் 7  கொரோனா  இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில்  பி எஃப் 7  கொரோனா  ஒடிசாவில் ஒருவருக்கும், குஜராத்தில் இருவருக்கும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி இன்று பிற்பகல் உயர்மட்ட குழு உடன் முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். 

Covid Positive

இந்நிலையில், குவைத்தில் இருந்து ஆந்திரா திரும்பிய இளம்பெண் ஒருவருக்கு பி.எஃப்.7 வகை கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் அயனவள்ளி, நெடுநூரி சவரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் குவைத்தில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 19-ந்தேதி குவைத்தில் இருந்து விமான மூலம் விஜயவாடா கண்ணவரம் விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அவருக்கு அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து இளம்பெண் தனது குடும்பத்தினருடன் காரில் வீட்டிற்கு சென்றார். நேற்று மாலை பரிசோதனை முடிவில் இளம்பெண்ணுக்கு புதிய வகை கொரோனாவான  பி எஃப் 7 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து இளம்பெண்ணை கோண சீமா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இளம்பெண்ணின் குடும்பத்தாரையும் தனிமைப்படுத்தி அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இளம்பெண்ணின் குடும்பத்தார் யார் யாருடன் தொடர்பில் இருந்தார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.