இது நேருவின் இந்தியா அல்ல - ராகுல் காந்திக்கு பாஜக பதிலடி

 
Modi vs rahul

இந்திய-சீன எல்லை மோதல் தொடர்பான ராகுல் காந்தியின் கருத்துக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. 

கடந்த 09ம் தேதி அருணாசல பிரதேச எல்லையில் இந்திய, சீனப் படைகள் இடையே மோதல் ஏற்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்து இருந்தது. இந்த செய்தி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த வெள்ளிக்கிழமை தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்ஸி பகுதி அருகே இந்திய படையினருடன் சீனப் படையினா் இடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பிலும் சிலருக்கு லேசாகக் காயம் ஏற்பட்டதாகவும், எல்லையில் அமைதியை ஏற்படுத்த இருநாட்டு ராணுவ தளபதிகள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது.  இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற இரு அவையிலும் விவாதம் நடத்துமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், கடந்த 13ம் தேதி நாடாளுமன்ற இரு அவைகளிலும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். 
 
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி கூறியதாவது: சீனா முழு போருக்கு தயாராகுவதாகவும், இந்திய அரசு தூங்குவதாகவும் தெரிவித்தார். மேலும், 2 ஆயிரம் சதுர கிலோமீட்டர் இந்திய நிலப்பரப்பை சீனா கைப்பற்றிவிட்டதாகவும் தெரிவித்தார். இந்நிலையில், ராகுல்காந்தியின் கருத்துக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக பாஜக செய்தித்தொடர்பாளர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் கூறுகையில், ராகுல்காந்தியின் கொள்ளுத்தாத்தா நேருவின் இந்தியா இதுவல்ல. தூங்கிக்கொண்டிருந்த போது 37 ஆயிரத்து 242 ஆயிரம் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை இழந்தது யார்?. தன்னை மீண்டும் நிலைநிறுத்திக்கொள்ள ராகுல்காந்தி தேசிய பாதுகாப்பு குறித்து பொறுப்பற்ற கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம். சோனியா காந்தி தலைமையிலான ராஜீவ்காந்தி அறக்கட்டளை சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து நிதி பெற்றுள்ளது. மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்தபோது எண்ணற்ற பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளது. இவ்வாறு கூறினார்.