திகார் ஜெயிலில் டெல்லி அமைச்சருக்கு மசாஜ் - வீடியோவால் அம்பலமான சொகுசு வாழ்க்கை

 
Delhi Minister Delhi Minister

ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு, சிறையில் ஒருவர் மசாஜ் செய்துவிடும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்து வருபவர் சத்யேந்திர ஜெயின். இந்நிலையில், இவர் மற்றும் குடும்பத்தினர் கடந்த 2017ம் ஆண்டு ஒன்றரை கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தியது. இந்நிலையில், கடந்த மே மாதம் ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையினர் சத்யேந்திர ஜெயினை கைது செய்தனர். கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்தின் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார். 


இதனை தொடர்ந்து அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க கோரி சத்யேந்திர ஜெயின் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்த நிலையில், சிறையில் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் விதிகளை மீறி சொகுசு வசதிகளை அனுபவித்து வருவதாக அமலாக்கத்துறை குற்றம் சுமத்தியது.  சத்யேந்திர ஜெயினுக்கு சிறப்பு சலுகை அளித்த புகாரில் திகார் சிறையின் கண்காணிப்பாளர் அஜித் குமார் கடந்த வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில், திகார் சிறையில் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு ஒருவர் மசாஜ் செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.