குரங்கம்மை பரவல் - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு

 
health

இந்தியாவில் குரங்கம்மை பரவல் அதிகரித்து வரும் நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய பட்டியலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் 75க்கும் மேற்பட்ட நாடுகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவையும் அந்த நோய் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் 9 பேர் இந்த நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளா மற்றும் டெல்லியில் தலா 4 பேருக்கும், தெலங்கானாவில் ஒருவருக்கும் குரங்கம்மை உறுதி செய்யப்பட்டது. கேரளா மற்றும் டெல்லியில் முதன் முதலாக குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட நபர்கள் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

monkeypox

இந்நிலையில், குரங்கம்மை நோய் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய பட்டியலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நபருடன் அடிக்கடி அல்லது நீண்ட தொடா்பில் இருந்தால் யாருக்கும் வேண்டுமானாலும் இந்நோய் தொற்றக் கூடும்; நோயாளியின் சுவாச துளிகள், கொப்பளங்களில் இருந்து வடியும் நீா் என நேரடியாகவோ அல்லது அவா்களது துணிகள் மூலம் மறைமுகமாகவோ இந்நோய் பரவும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.குரங்கு அம்மை பரவாமல் தடுக்க, பாதிக்கப்பட்ட நபரை மற்றவா்களிடமிருந்து முதலில் தனிமைப்படுத்த வேண்டும். சுத்திகரிப்பான் அல்லது சோப்புகள் மூலம் கைகளை கழுவுவதுடன், நோயாளிக்கு அருகில் செல்லும்போது முகக்கவசமும் கையுறையும் அணிவது அவசியம். கிருமிக்கொல்லிகளை பயன்படுத்தி சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்த வேண்டும் 

குரங்கு அம்மை நோயாளிகளின் உடைகள், படுக்கை விரிப்புகள், துண்டுகள் உள்ளிட்டவற்றை வேறு யாருடனும் பகிரக் கூடாது. நோயாளிகளின் துணிகளை நோய் பாதிப்பு இல்லாத நபா்களின் துணிகளுடன் சோ்த்து துவைக்கக் கூடாது. குரங்கு அம்மை அறிகுறிகள் இருப்பதாக தோன்றினால், பொது நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்கவேண்டும். குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவா்கள் அல்லது அறிகுறிகள் உள்ளவா்களை புறக்கணித்து, களங்கப்படுத்தக் கூடாது.
 இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது