அக்னிபத் திட்டம் குறித்து பொய்யான தகவல் - 35 வாட்ஸ்அப் குரூப்களுக்கு தடை

 
whatsapp

அக்னிபத் திட்டம் குறித்து பொய்யான தகவல் பரப்பிய 35 வாட்ஸ்அப் குரூப்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

இந்திய ராணுவத்தில் அக்னிபத் என்ற புதிய திட்டத்தை  மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் 17.5 முதல் 21 வயது வரையிலான இருபாலரும், 4 ஆண்டுகள் வரை முப்படைகளில்  பணிபுரியலாம். அதன்பின்னர் சேவா நிதி எனப்படும் தொகுப்பு ஊதியம் வழங்கப்பட்டு, அவர்கள்: பணியில்  இருந்த் விடுவிக்கப்படுவர்.  பணித் திறனின் அடிப்படையில்   25 சதவீதம் பேர் நிரந்தரம் செய்யப்பட வாய்ப்புள்ளது.  அதேநேரம் இவர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் எதுவும் வழங்கப்படாது.  இந்நிலையில், அக்னி பாத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  பீகார், உ.பி., தெலங்கானாவில் 4  ரயில்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில், 2 பேர் தற்கொலை செய்துகொண்டனர். தெலங்கானாவில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இன்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. 

இந்நிலையில், அக்னிபத் திட்டம் குறித்து பொய்யான தகவல் பரப்பியதற்காக 35 வாட்ஸ்அப் குரூப்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பொய்யான தகவல் பரப்பிய குற்றச்சாட்டில் தற்போது வரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.