குடியரசுத் தலைவர் தேர்தல்: சிபிஎம், ஆம் ஆத்மியை தொடர்ந்து மம்தாவின் அழைப்பை புறக்கணித்த சந்திரசேகர ராவ்..

 
தெலங்கானாவில் சந்திரசேகர ராவுக்கு ஆதரவு: பாஜக அறிவிப்பு

குடியரசுத் தலைவர் பொது வேட்பாளர் குறித்து முடிவெடுக்க  22 கட்சித் தலைவர்களுக்கு  மேற்குவங்க முதல்வர்  மம்தா பானர்ஜி அழைப்புவிடுத்திருந்த நிலையில்,. அந்தக்   கூட்டத்தைப் புறக்கணிப்பதாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற ஜூலை 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.   புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான  தேர்தல் வருகிற ஜுலை மாதம் 18 ஆம் தேதி நடைபெறும் என  இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.  இதனயடுத்து பாஜகவுக்கு எதிரான வலுவான கூட்டணியை அமைக்கவும், பொதுவான வேட்பாளரை அறிவிக்கவும்  எதிர்க்கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.  குடியரசுத் தலைவர் தேர்தலை பொறுத்தவரை மாநிலங்களின் பங்கு  மிக முக்கியம் என்பதால்,  பிரதான கட்சிகள் அனைத்தும் தங்களது கூட்டணிக் கட்சிகளுடன்  தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.  

மம்தா பானர்ஜி

 இந்த நிலையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி,  டெல்லி, கேரளா, தமிழகம், ஒடிசா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநில  முதலமைச்சர்களுக்கும் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு  கடந்தவாரம் கடிதம் எழுதியிருந்தார்.  அதில்,  குடியரசுத் தேர்தல் தொடர்பாக முடிவெடுக்க இன்று (  ஜூன் 15 ஆம் தேதி ) டெல்லியில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.  

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்

ஆனால்  இந்தக் கூட்டத்தில்  பங்கேற்க   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆம் ஆத்மி  உள்ளிட்ட பல கட்சிகள் மறுப்பு  தெரிவித்துள்ளன.   அதனைத்தொடர்ந்து தற்போது   தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தலைவரும் அம்மாநில முதல்வருமான சந்திரசேகர ராவ், மம்தா அழைப்பு விடுத்திருந்த கூட்டத்தை புறக்கணிக்கப்பதாக  அறிவித்துள்ளார்.  இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்பதாக கூறப்பட்டுள்ளதால்,  காங்கிரஸ் கலந்துகொள்ளும் எந்த ஒரு கூட்டத்திலும் மேடையைப் பகிர்ந்துகொள்வதில்லை என்று டிஆர்எஸ் உறுதியாக இருப்பதாக  சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். இது   பாஜகவுக்கு எதிரான வலுவான கூட்டணி அமைவதில் ஏற்பட்டுள்ள  முதல் விரிசலாக பார்க்கப்படுகிறது.  

 குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை நிறுத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ,  மம்தா பானர்ஜி  உள்ளிட்ட சில கட்சிகள் விருப்பம் தெரிவித்திருக்கின்றன. ஆனால் சரத்பவார் அதற்கு மறுப்பு  தெரிவித்துவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.