திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.. தேவஸ்தானம் அறிவிப்பு..

 
திருப்பதி கோவில்

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முககவசம்  அணிய வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.  

திருமலையில் வைகுண்ட  ஏகாதசிக்கான ஏற்பாடுகளை  தேவஸ்தான செயல் அதிகாரி அனில் குமார் சிங்கால், ஆட்சியர் வெங்கடரமண ரெட்டி, கூடுதல் செயலதிகாரி வீரபிரம்மம், இணை செயலதிகாரி சதா பார்கவி, முதன்மை பாதுகாப்பு அதிகாரி நரசிம்ம கிஷோர், மாவட்ட எஸ்பி பரமேஸ்வர ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் அன்னமய்யா பவனில்  ஆய்வு செய்தனர். பின்னர் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி இதுகுத்து  செய்தியாளர்களிடம் பேசினார்.

கொரோனா வைரஸ்

அவர் மேலும் கூறியதாவது, “வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்காக திருப்பதியில் பக்தர்களின் வசதிக்காக  9 பகுதிகளில் சுமார் 92 கவுண்டர்கள் மூலம் இலவச தரிசன  டோக்கன்கள் வழங்கப்படும். ஜனவரி 2ம் தேதி முதல் 11ம் தேதி வரையிலான 10 நாட்களுக்கு, ஜனவரி 1ம் தேதி மதியம் 2 மணி முதல் சர்வதர்ஷனம் (  இலவச  )  டோக்கன் வழங்கும் பணி  தொடங்கப்படும்.  10 நாள் ஒதுக்கீடு முடியும் வரை தொடர்ந்து 4 லட்சத்து 50 ஆயிரம் டோக்கன்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் விரைவு தரிசனத்துக்காக செய்யப்பட்டுள்ள இந்த ஏற்பாடுகளை கண்காணித்து டோக்கன் எடுத்த பிறகே பக்தர்கள் திருமலைக்கு வர வேண்டும்

இந்த டோக்கன் மையங்களில் பக்தர்களுக்கு உணவு,  பால், டீ மற்றும் காபி வழங்கவும் தற்காலிக கழிப்பறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ஜனவரி 1, 2 முதல் 11 வரை மொத்தம் 2.05 லட்சம் டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்பனையாகியுள்ளன. பக்தர்கள் முன்கூட்டியே வந்து வரிசையில் நின்று காத்திருக்காமல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட டோக்கனில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே வர வேண்டும். புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி, துவாதசி காரணமாக டிசம்பர் 29 முதல் ஜனவரி 3 வரை தங்கும் விடுதிக்கான முன்பதிவு ரத்து முழுவதும் செய்யப்படுகிறது.  திருமலையில் குறைந்த தங்குமிட வசதிகள் இருப்பதால், டிக்கெட் அல்லது டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் மட்டுமே பக்தர்கள் திருமலைக்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வைகுண்ட ஏகாதசி

பக்தர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, ஜனவரி 1ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜனவரி 2 முதல் 11ஆம் தேதி வரை நேரில் வரும் அரசியல் சாசனப் பதவி வகிக்கும் உயரதிகாரிகளுக்கு மட்டுமே விஐபி தரிசனம் வழங்கப்படும்.  ஒரு விஐபிக்கு இரண்டு அறைகள் மட்டுமே ஒதுக்கப்படும். ஜனவரி 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.  வைகுண்ட ஏகாதசி அன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை  மலையப்பசுவாமி  தேவி பூதேவியுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கோயிலின் நான்கு வீதிகளிலும் வலம் வந்து  பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.

வைகுண்ட துவாதசியை முன்னிட்டு அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறும். பக்தர்களுக்கு தட்டுபாடு ஏற்படாத வகையில்  3.5 லட்சம் லட்டுகள்  இருப்பு வைக்கப்பட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மாநிலத்தின் பழங்குடியினர் மற்றும் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த ஏழை மக்களுக்கு ஒரு நாளைக்கு 1000 பேர் வீதம் 10 நாட்களுக்கு சுமார் 10 ஆயிரம் பேரை தேவஸ்தான அழைத்து வந்து வைகுண்ட வாயில்  தரிசனம் செய்து வைக்கப்பட உள்ளது.  திருமலையின் அனைத்து முக்கியப் பகுதிகளிலும் 400 பணியாளர்களைக் கொண்டு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படும்.

திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.. தேவஸ்தானம் அறிவிப்பு.. 

அன்னபிரசாத கட்டிடத்தில் 10 நாட்களுக்கு காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை அன்னபிரசாத விநியோகம் செய்யப்படும். இதேபோல், வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ், நாராயணகிரி ஷெட் உள்ளிட்ட பகுதிகளில் உணவு, குடிநீர், டீ, காபி வழங்கப்படும்.  பக்தர்களுக்குத் தேவையான பகுதிகளில் மருத்துவச் சேவைகளை வழங்குவதற்காக மருத்துவக் குழுக்களை அமைர்து மேலும், 3 மருந்தகங்களும், 1 நடமாடும் மருந்தகமும் நிறுவப்பட உள்ளது. திருப்பதி மற்றும் திருமலையில் தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் காவல்துறையின் ஒருங்கிணைப்புடன் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  

 பக்தர்களின் வசதிக்காக இரண்டு மலைப்பாதை சாலைகளும் 24 மணி நேரமும் திறந்து வைக்கப்படும்.   திருமலையில் சுமார் 8 ஆயிரம் வாகனங்கள் நிறுத்த போதுமான வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  கோவிந்த மாலை அணிந்த பக்தர்கள் டோக்கன் எடுத்து தரிசனம் செய்ய திருமலைக்கு வர வேண்டும். டோக்கன் இல்லாத பக்தர்களுக்கு தரிசனம் கிடையாது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் சூழலில் பக்தர்கள் முக கவசம்  அணிந்து வர வேண்டும் அதிகளவான பக்தர்கள் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதால், அனைவரின் ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டு, பக்தர்கள் அனைவரும் முறையாக முககவசம் அணிந்து வரவேண்டும்” என்று கூறினார்.