வகுப்பறையாக மாறிய இரட்டை அடுக்கு பேருந்து - மாணவர்கள் உற்சாகம்

 
bus class room

கேரள அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான இரட்டை அடுக்கு பேருந்து, தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கான வகுப்பறையாகவும் பொழுதுபோக்கிற்கான இடமாகவும் மாறி உள்ளது.

கேரளாவில் உள்ள பல பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறைகள் இல்லாத சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பேருந்துகளை  உடைத்து விற்காமல், பள்ளி வகுப்பறைகளாக மாற்ற முன்னதாக கேரள அரசு முடிவு செய்திருந்தது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண பழைய தாழ்தள பேருந்துகளை வகுப்பறையாக மாற்ற கேரள அரசு திட்டமிட்டுள்ளது.  அதன்படி பழைய பேருந்துகளை பள்ளி வகுப்பறைகளாக மாற்றும் சோதனை முயற்சி நடைபெற்றது.

bus

மணக்காட்டில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் (டிடிஐ) வளாகத்தில் அமைந்துள்ள பள்ளிக்கு இரட்டை அடுக்கு தாழ்தள பேருந்து நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்த வகுப்பறையில் ஒரு டிவி, ஏர் கண்டிஷனர், பல வண்ண மேசைகள் கொண்ட நாற்காலிகள், பெஞ்சுகள் மற்றும் புத்தகங்களுக்கான அலமாரிகள் உள்ளன. இதேபோல் இந்த பேருந்தில் ஸ்டீயரிங் மற்றும் ஓட்டுநர் இருக்கையுக் தக்கவைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பேருந்தை ஓட்டுவது போல் விளையாடுவதற்காக அவை வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் பேருந்தின் மேல் அடுக்கு வாசிப்பு மற்றும் பொழுதுபோக்குக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

bus class

பேருந்தின் பக்கங்களில் வெளிர் நீலம் மற்றும் மஞ்சள் நிறத்தில் பறவைகள், மரங்கள், விலங்குகள் மற்றும் புத்தகங்கள் போன்ற ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன இந்த வகுப்பறையைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பைப் பெறும் மாணவர்களுக்கு இது ஒரு உற்சாகமான அனுபவமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி ராஜூ, புதிதாக வகுப்பறை கட்ட பல கோடி ரூபாய் செலவாகும் என்றும், பேருந்தை வகுப்பறையாக மாற்ற குறைந்த செலவாகும் என்றும் கூறினார். கே.எஸ்.ஆர்.டி.சி.க்கு இது ஒரு சிறிய நஷ்டம் என்றாலும் மாணவர்களின் எதிர்காலத்திற்கு இது பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.