நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி.. மகாராஷ்டிராவில் ஆட்சியை தக்க வைத்தார் ஏக்நாத் ஷிண்டே..

 
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி.. மகாராஷ்டிராவில் ஆட்சியை தக்க வைத்தார் ஏக்நாத் ஷிண்டே..


மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே , பெரும்பான்மையை நிரூபித்து  ஆட்சியை தக்கவைத்துள்ளார்.   

மகாராஷ்டிராவில்  கடந்த இரண்டரை ஆண்டுகளாக  சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இடையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை முறித்து, பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.க்கள், மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினர்.  

ஏக்நாத் ஷிண்டே

கடந்த மாதம் 20ம் தேதி சட்ட மேலவை தேர்தல் முடிந்த கையோடு ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் , அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப்பெறுவதாக  அறிவித்தார். இதனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது.   இதனையடுத்து  கடந்த மாதம் 30ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடப்பட்ட நிலையில்,  அதற்கு முதல் நாளான  புதன்கிழமை  உத்தவ் தாக்கரே  முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.  அடுத்தநாளே  ஏக்நாத் ஷிண்டே - பாஜக கூட்டணியில் புதிய ஆட்சி அமைந்தது.  

ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ்

அதிருப்தி ஏம்.எல்.ஏக்கள் தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகவும், பாஜகவைட் சேர்ந்த தேவேந்திர பட்னவிஸ் துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.  மகாராஷ்டிரா முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஏக்னாத் ஷிண்டே  இன்று  ( திங்கள் கிழமை)  சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ள நிலையில், நேற்று  சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றது.  இதில்  ஏக்நாத் ஷிண்டே- பாஜக கூட்டணி சார்பில் பாஜகவைச் சேர்ந்த ராகுல் நர்வேகர்  புதிய சபாநாயகராக  தேர்வு செய்யப்பட்டார்.  

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி.. மகாராஷ்டிராவில் ஆட்சியை தக்க வைத்தார் ஏக்நாத் ஷிண்டே..

இதனைத்தொடர்ந்து இன்று  நம்பிக்கை வாக்கெடுப்பு  நடைபெற்றது. புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  ராகுல் நர்வேக்கர்  இந்த  நம்பிக்கை வாக்கெடுப்பை  முன்னின்று நடத்தினார்.  அப்போது ஒவ்வொரு உறுப்பினரையும் நிற்க வைத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.   பெரும்பான்மைக்கு 144  வாக்குகள் தேவைப்பட்ட நிலையில்,  164  வாக்குகள் பெற்று ஏக்நாத் ஷிண்டே நன்பிக்கை  வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். பாஜகவின்  106 எம்.எல்.ஏக்களும், ஏக்நாத் ஷிண்டேவிடம் 39  எம்.எல்.ஏக்கள் மற்றும் சுயேட்சைகள் என 164 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.  இதனையடுத்து மகாராஷ்டிராவின் முதலமைச்சர் பதவியை ஏக்நாத் ஷிண்டே தக்க வைத்துக் கொண்டார்.