இன்று முதல் முதியவர்கள், சிறுவர்களுக்கு தனிவரிசை.. இதுவரை 20.88 லட்சம் பேர் தரிசனம்..

 
ஐயப்பன்

சபரிமலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க  இன்று முதல் முதியவர்கள், சிறுவர்களுக்கு தனிவரிசை அமல்படுத்தப்படுகிறது.

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் கடந்த மாதம் 16ம் தேதி  மகரவிளக்கு பூஜைக்காக நடைதிறக்கப்பட்டது.  தொடர்ந்து  கடந்த 32 நாட்களில் 20 லட்சத்து  88 ஆயிரத்து  398 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.  அத்துடன் கடந்த  32 நாட்களில்  சாமி தரிசனம் செய்வதற்காக 23.37 லட்சம் பேர் முன்பதிவு செய்திருக்கின்றானர். அவர்களில்,  20.88 லட்சம் பேர் நேற்று வரை சாமி தரிசனம் செய்திருக்கின்றனர். மண்டல பூஜைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், நாளுக்குநாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.  நாள்தோறும் சராசரியாக சுமார் 1 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வரும் நிலையில்,  மேலும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

சபரிமலை

இந்நிலையில்  வரலாறு காணாத கூட்டத்தால்  பக்தர்கள் அவதிக்கு ஆளாகின்றனர்.  நீதிமன்ற உத்தரவின்படி கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யவும் , தரிசன நேரம் நீட்டிப்பு உள்ளிட்ட  பல்வேறு நடவடிக்கைகளை திருவிதாங்கூர் தேவஸ்தானம் எடுத்து வருகிறது.  கேரள காவல்துறையின் கோரிக்கைக்கு ஏற்ப  பக்தர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதாவது 1.20 லட்சம் பேர் முன்பதிவு செய்யலாம் என்று இருந்த முறையை மாற்றி, ஒரு நாளில் 90 ஆயிரம் பேர் மட்டுமே முன்பதிவு செய்யலாம் என்ற கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது.  அதேநேரம் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு தனி வரிசை இல்லாததால் அவர்கள்  நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.  

சபரிமலை ஐயப்பன் கோயில்

இதுதொடர்பான கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்த நிலையில்,  பம்பையில் தேவஸ்தான அமைச்சர் கெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தனிவரிசை ஏற்படுத்துவது என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் சபரிமலை தரிசனத்திற்கு 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், சிறுவர், சிறுமிகள் மற்றும் முதியவர்களுக்கு இன்று  முதல் தனி வரிசை அமலுக்கு வந்துள்ளது.  மேலும் தரிசனம் முடிந்து ஊர் திரும்பும் பக்தர்களின் வசதிக்காகவும், பம்பையில் இருந்து நிலக்கல் வரை  செல்ல போதிய பேருந்து வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று  மாவட்ட ஆட்சியருக்கு  கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.