இமாச்சலபிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகுவுக்கு கொரோனா

 
HP CM

இமாச்சலபிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி அங்கு ஆட்சி அமைத்தது. இமாச்சல பிரதேசத்தின் முதல்வராக சுக்விந்தர் சிங் சுகுவும், துணை முதல்வராக முகேஷ் அக்னிஹோத்ரியும் கடந்த 11ம் தேதி பதவியேற்றுக்கொண்டனர். இந்நிலையில், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநில அரசின் செய்தித் தொடர்பாளர் இந்த தகவலை உறுதிபடுத்தியுள்ளார். 

hp cm

இமாச்சலபிரதேச முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக அவர், டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டுருந்தார். 
இதையொட்டி அவருக்கு வழக்கமான கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர் கொரோனாவால் பாதிக்கப் பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து பிரதமரை சந்திக்கும் திட்டத்தை தள்ளி வைத்த அவர், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும் அவரது அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்த 16 ஆம் தேதி ராஜஸ்தானில் நடைபெற்ற ராகுல்காந்தியின் பாத யாத்திரையில் சுக்விந்தர் சிங்கும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.