மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை புதுச்சேரிக்கு வருகை - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

 
amit shah

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அரசு முறை பயணமாக நாளை புதுச்சேரிக்கு வரவுள்ளதையொட்டி, புதுச்சேரி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 
 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அரசு முறைப் பயணமாக நாளை புதுச்சேரிக்கு வருகிறார். காலை 9:30 மணிக்கு தனி விமானம் மூலம் லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு வரும் மத்திய அமைச்சரை, துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் மற்றும் அதிகாரிகள் வரவேற்கின்றனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் காலாப்பட்டில் உள்ள புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் நடைபெறும் அரவிந்தரின் 150ம் ஆண்டு விழாவில் பங்கேற்கிறார். பகல் 12:00 மணிக்கு புதுச்சேரி, ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்திற்கும், 12:10 மணிக்கு அரவிந்தர் ஆசிரமத்திற்கும் சென்று அஞ்சலி செலுத்துகிறார். தொடர்ந்து பகல் 12:25 மணிக்கு துணைநிலை ஆளுநர் மாளிகை செல்கிறார். அங்கு துணைநிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சர் உள்ளிட்டோருடன் மதிய விருந்தில் பங்கேற்கிறார். 

Puduchery

பகல் 1:30 மணிக்கு அமித்ஷாவை, முதல்வர் ரங்கசாமி சந்தித்து பேசுகிறார். பகல் 1:55 மணிக்கு துணைநிலை ஆளுநர், மாளிகையில் இருந்து புறப்பட்டு, கம்பன் கலையரங்கம் செல்கிறார். அங்கு நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று புதிய பஸ் நிலையம், விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டங்களை துவக்கி வைக்கிறார். இதனைத்தொடர்ந்து மாலை 3:55 மணிக்கு புறப்பட்டு, இந்திராகாந்தி சதுக்கம் அருகே உள்ள பா.ஜ, தலைமை அலுவலகம் செல்கிறார். பாஜக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுடன் கூட்டம் நடைபெறுகின்றது. தொடர்ந்து அங்கிருந்து மாலை 5:00 மணிக்கு புறப்பட்டு, லாஸ்பேட்டை விமான நிலையம் சென்று, தனி விமானம் மூலம் டில்லி செல்கிறார். அரசு விழா நடைபெறும் பல்கலை கழகம், கம்பன் கலையரங்கம் மற்றும் கட்சி அலுவலகங்கள் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.