நாட்டில் கொரோனா 4வது அலை தொடங்கியதா? - ஐ.சி.எம்.ஆர். பதில்

 
ICMR

நாட்டில் கொரோனா 4 வது அலை இன்னும் தொடங்கவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) கூடுதல் இயக்குநா் சமீரன் பாண்டா தெரிவித்துள்ளார். 

கடந்த வாரத்திலிருந்து இந்தியாவில் கொரோனா தொற்று  பாதிப்பு  வேகமாக அதிகரித்து வருகிறது.   கடந்த 7 ஆம் தேதி  பாதிப்பு எண்ணிக்கை 3,714 ஆக இருந்த நிலையில்,  கடந்த 8 ஆம் தேதி 5,233 ஆகவும், ஜூன் 9ம் தேதி   7,240 ஆகவும்   அதிகரித்தது. இந்த நிலையில் நேற்று  சற்றும் எதிராபாத விதமாக பாதிப்பு   7,584  ஆக பதிவானது.  இந்த நிலையில் இன்று  பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கிறது.   கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 8,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.  இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 32 லட்சத்து 13 ஆயிரத்து 435 ஆக அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா நான்காவது அலை தொடங்கிவிட்டதாக மக்கள் பலரும் நினைக்க தொடங்கிவிட்டனர். 

covid test

இந்நிலையில், நாட்டில் கொரோனா 4 வது அலை இன்னும் தொடங்கவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) கூடுதல் இயக்குநா் சமீரன் பாண்டா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: மாவட்ட அளவிலான தரவுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும், ஒரு சில மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதைக் கொண்டு, 4-ஆவது அலை தொடங்கிவிட்டதாக கூற முடியாது எனவும் கூறினார். மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மட்டுமே கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர், அனைத்து மாநிலங்களிலும் அதிகரிக்கவில்லை என்றார். மேலும் கொரோனாவின் அனைத்து உருமாற்றங்களும் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை இல்லை எனவும் சமீரன் பாண்டா தெரிவித்துள்ளார்.