இஸ்ரோவின் ‘இளம் விஞ்ஞானி திட்டம்’.. 150 மாணவர்களுக்கு பயிற்சி- விண்ணப்பங்கள் வரவேற்பு

 
இஸ்ரோவின் ‘இளம் விஞ்ஞானி திட்டம்’.. 150 மாணவர்களுக்கு பயிற்சி- விண்ணப்பங்கள் வரவேற்பு

 இளம் விஞ்ஞானி திட்டத்தின் கீழ்  நாடு முழுவதும் இருந்து 150 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

பெங்களூருவில் அமைந்துள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ,  யுவ விஞ்ஞானி கார்யக்கிரம்(யுவிகா) எனும் திட்டத்தை தொடங்கியிருக்கிறது. அதாவது  இளம் விஞ்ஞானி திட்டம் எனப்படும் இந்த திட்டம் மூலம்  நாடு முழுவதிலும் இருந்து 150  மாணவர்களை தேர்வு செய்து விண்வெளி தொழில்நுட்பம், விண்வெளி அறிவியல் மற்றும் விண்வெளி திட்டங்கள் குறித்த பயிற்சி வழங்கப்படும். கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த யுவிகா திட்டத்தில், மாணவர்களுக்கு செய்முறை விளக்கப் பயிற்சி மற்றும் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடும் வாய்ப்புகள் கிடைக்கும்.

‘விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டம் தாமதமாகும்’- இஸ்ரோ தலைவர் தகவல்

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்தத் திட்டம் செயல்படித்தபாடம் இருந்தது. இந்நிலையில் நடப்பாண்டு இந்த திட்டம் வருகிற மே மாதம் 16-ந் தேதி தொடங்கி அதே மாதம் 28-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்தில் இருந்து 4 அல்லது 5 பேர் என மொத்தம் 150 மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.  தேர்வு செய்யப்படும் மாணவர்கள் இஸ்ரோவிலேயே தங்கி பயிற்சி பெற வேண்டும்.

இஸ்ரோவின் ‘இளம் விஞ்ஞானி திட்டம்’.. 150 மாணவர்களுக்கு பயிற்சி- விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்த திட்டத்திற்கான விண்னப்பப்பதிவு தற்போது தொடங்கியிருக்கிறது.  இதில் பங்கேற்க மாணவர்கள் சில அளவுகோலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி தற்போது பள்ளியில் 9ம் வகுப்பு படித்துவரும் மாணவர்கள் மட்டுமே இதில் பங்கேற்க விண்ணப்பிக்க முடியும். 8ம் வகுப்பில்  பெற்ற மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.  விருப்பம் உள்ளவர்கள் www.isro.gov.in என்ற இணையதளம் மூலமாக ஏப்ரல் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் பட்டியல் ஏப்ரல் 20ம் தேதி வெளியாகும்.

மாணவர்கள்

 இந்த திட்டம் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், பெங்களூருவில் உள்ள யு.ஆர்.ராவ் செயற்கைகோள் மையம், அகமதாபாத்தில் உள்ள விண்வெளி அப்ளிகேஷன் மையம், ஐதராபாத்தில் உள்ள தேசிய ரிமோட் சென்சிங் மையம், சில்லாங்கில் உள்ள வடகிழக்கு விண்வெளி அப்ளிகேஷன் மையம் ஆகிய 5 இடங்களில்  நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  இதுதொடர்பான சந்தேகங்களுக்கு 080 2217 2119 என்ற எண்ணுக்கும்,  yuvika@isro.gov.in  எனும் மின்னஞ்சல் முகவரிக்கும் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.