5 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா பரவல்.. கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல்..

 
corona virus

இந்தியாவில்  5 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து, கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.  

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா 3வது அலை உச்சத்தில் இருந்து வந்தது. தினசரி பாதிப்பு 3 லட்சம் வரை பதிவாகி வந்த நிலையில் பல்வேறு மாநிலங்களிலும்  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  பள்ளிகள் மூடப்பட்டதோடு, இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டன. கடும் கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கையும் கனிசமாக அதிகரித்ததால், கொரோனா பரவல்  மெல்ல மறைந்தது.  பின்னர் கொரோனா 3-ம் அலை முடிவுக்கு வந்து தினசரி பாதிப்பும்  ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது.

கொரோனா

இந்தநிலையில் கடந்த 4 நாட்களாக  கொரோனா தினசரி   பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.  இன்று நாடு முழுவதும் 1,150 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அதிலும்,  கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக  தொற்று பாதிப்பு மீண்டும் அதிகமாக பதிவாகி வருகிறது. கடந்த வாரத்தில் கேரளாவில் மட்டும் 2,321 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  இது நாடு முழுவதும் பதிவான மொத்த பாதிப்பில் 31.8 % ஆகும்.   

கொரோனா

தொற்று பாதிப்பு உயர்ந்து வருவதால் இந்த 5 மாநிலங்களிலும்  கண்காணிப்பு பணிகளை தீவிரமாக  மேற்கொள்ளவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருக்கிறது. இதுகுறித்து அந்தந்த மாநில சுகாதாரத்துறை செயலர்களுக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஷேஷ் பூஷன் கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில்,   கொரோனா பரிசோதனை மற்றும் கண்காணிப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.