நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்தன

 
restriction


மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து இன்று முதல் நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்தன. இருப்பினும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவில் இருந்து மக்களை காப்பதற்காக மத்திய அரசு முகக்கவசம் அணிதல், கிருமி நாசினிகளை கொண்டு கைகளை சுத்தப்படுத்துதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், திருமணம், இறுதிசடங்கள், திருவிழாக்கள், அரசியல் நிகழ்வுகள் உள்ளிட்டவற்றிற்கு கட்டுப்பாடு விதித்தல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத வகையில் பொதுமுடக்கமும் அறிவிக்கப்பட்டன. முதல் அலையின் போது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், இரண்டாம அலையின் போது குறைவான கட்டுப்பாடுகளே விதிக்கப்பட்டன. இதேபோல் மூன்றாம் அலையின் போது கட்டுப்பாடுகள் பெரிய அளவில் விதிக்கப்பட்டவில்லை. 

lockdown image

கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதை அடுத்து கடந்த 23-ம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் நாடு முழுவதும் அமலில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகள் மார்ச் 31-ம் தேதி நள்ளிரவுடன் முடிவுக்கு வருவதாக அறிவித்தது. இதன் காரணமாக இந்த அறிவிப்பு இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. முகக்கவசம் அணிதல், கைகளை கிருமி நாசினிகளை கொண்டு அடிக்கடி கழுவுதல் ஆகிய கட்டுப்பாடுகளை தவிர அனைத்து கட்டுப்பாடுகளும் விலக்கிக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.