இந்தியாவில் 54 சீன செயலிகளுக்கு தடை.. மத்திய அரசின் இந்த முடிவுக்கு இதுதான் காரணம்..

 
54 சீன செயலிகளுக்கு தடை


இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள  54  சீன செயலிகளை  தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள 54 சீன ஆப்களை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்து புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலிகள் பெரிய சீன தொழில்நுட்ப நிறுவனங்களான டென்சென்ட், அலிபாபா மற்றும் கேமிங் நிறுவனமான நெட்ஈஸ் ஆகியவற்றின் தயாரிப்பில்   உள்ளது.  2020 இல் இந்தியா விதித்த தடைக்குப் பிறகு, இந்த நிறுவங்களின் செயலிகள் மறுபெயரிடப்பட்டு மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன

சீன செயலிகளுக்கு தடை

ஆகையால் தற்போது  ஸ்வீட் செல்ஃபி ஹெச்டி, பியூட்டி கேமரா, செல்ஃபி கேமரா , ஆப் லாக், டுயல்  ஸ்பேஸ் லைட், விவா வீடியோ எடிட்டர் , ஆன்மியோஜி செஸ் உள்ளிட்ட 54  செயலிகளுக்கு தடை விதிக்க மத்திய  அரசு முடிவு செய்துள்ளது.   இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 54  செயலிகளை தடை செய்யுமாறு கூகுளின் ப்ளே ஸ்டோர் உள்ளிட்ட முக்கிய ஆப் ஸ்டோர்களுக்கும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சீன செயலிகளுக்குத் தடை

ஏற்கனவே  கடந்த 2020-ம் ஆண்டு ஜுன் 15-ம் தேதி நள்ளிரவு இந்தியா-சீன படைகள் இடையே  கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில்  மோதல் ஏற்பட்டது.  இதில்  20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்ததை அடுத்து  கடந்த 2020 ஜூன் 29-ம் தேதி டிக்டாக் உள்பட 58 சீன செயலிகளுக்கு  இதியா தடை விதித்தது. அதனைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 118  சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதில் இந்தியாவில் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வந்த  டிக்டாக், ஷேரிட், வீசாட், ஹெலோ, யுசி நியூஸ், பிகோ லைவ் செயலிகளை தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவில் இதுவரை 200-க்கும் மேற்ப்பட்ட சீன செயலிகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது புதிதாக 54 செயலிகள் தடை செய்ய மத்திய அரசு முடிடு செய்திருக்கிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சீன செயலிகளுக்கு தடை